Last Updated:
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எந்த மாநிலத்துக்கும் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுவை தள்ளுபடி செய்தது.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துமாறு எந்த மாநிலத்துக்கும் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கும் தேசிய கல்வி கொள்கைக்கும் என்ன தொடர்பு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மனுதாரர், தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் தற்போது டெல்லியில் தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள கல்விக் கொள்கையால் தன்னால் இந்தி பயில முடியவில்லை என்றார். அதற்கு, இப்போது டெல்லியில் தானே இருக்கிறீர்கள் அங்கு இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என எந்த மாநிலத்துக்கும் நேரடியாக உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்தக் கொள்கையை அமல்படுத்தாததால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அதுதொடர்பாக நீதிமன்றம் தலையிடலாம் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், மனுவில் அதுபோன்ற எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!


