உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டி வரும் ஜூன் 11-ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இங்கிலாந்து லாட்ஸ் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளது.
இந்தியாவிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் தான் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அந்த கோப்பைக்கு இந்தியா தனது கவனத்தை செலுத்தும். எனவே அதற்காக ஒரு கேப்டனை பிசிசிஐ தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரோகித் சர்மா இடத்தை நிரப்ப, சிறந்த வீரரை இந்தியா தேர்வு செய்ய வேண்டும்.
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என்ற பட்டியலில் 4 பேர் இடம் பெற்றுள்ளார்கள்.
1. ஜஸ்பிரீத் பும்ரா:
கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில், முதல் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இதனால் முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சிறந்து செயல்பட்டதால், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாகும் வாய்ப்பு பும்ராவுக்கு கொடுக்கப்படலாம். ஆனால் பும்ராவுக்கு அதிகம் காயம் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் என்பதால், அவர் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்பதை பிசிசிஐ தான் தெரிவிக்க வேண்டும்.
2. ரிஷப் பண்ட்:
2021-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், அதற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி தனது பெயரை நிலை நிறுத்தினார். இவரும் இந்திய டெஸ்ட் அணிக்கான அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் இவரது ஃபார்ம் குறித்தும், லக்னோ அணியை இவர் வழிநடத்தியது குறித்தும் இவரது கேப்டன்சி மீது நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படும் இறுதி முடிவும் கேள்விக்குறியதே.
3. ஷுப்மன் கில்:
இந்திய ஓபனராக இருந்த ஷுப்மன் கில், கடந்த சில நாட்களாக 3-ஆவது பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார். தற்போது ரோகித் சர்மா இல்லாத நிலையில், மீண்டும் அவர் ஓபனராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய போட்டிகளில் ரன் எடுப்பார் என நிரூபித்துள்ள இவர், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
4. கே.எல்.ராகுல்:
ஏற்கனவே இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்துள்ள கே.எல்.ராகுல், ரோகித் சர்மாவுக்கு பதில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அனுபவமும், வெளிநாடுகளில் அவரது ஃபார்மும், இந்திய அணிக்கு பெரிதும் உதவலாம். கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றாலும், அவரது கேப்டன்சியில் இந்தியா அதிக போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்ற மோசமான கணக்கும் உள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பையும் வேண்டாம் என கூறிய அவர், இந்திய அணிக்கு தலைமை தாங்குவாரா என்பதும் கேள்விக்குறியதே. மேலும் இளம் வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என பிசிசிஐ நினைத்தால், கே.எல்.ராகுலின் வயது அதற்கு தடையாக அமையலாம். இத்தனை காரணங்கள் இருப்பதால், இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்பதை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

