Last Updated:
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசி, இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா ‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை தாக்கி, அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும், இன்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலையும் பாகிஸ்தான் மேற்கொண்டது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்து தோல்வி அடையச் செய்தது. இதில், அதிநவீன S 400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இன்று இரவு, ஜம்மு & காஷ்மீரில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து அதனை முறியடித்திருக்கிறது. ஜம்மு பகுதியில், கட்ரா, அதன் அருகில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில், தெற்கு காந்திநகர் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் விமானநிலையத்தைக் குறிவைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதனை முறியடித்து இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இவற்றை S 400 சுதர்சன் சக்கராவை பயன்படுத்தி தடுத்து முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ஜெ-17 போர் விமானத்தை இந்திய விமானப்படை எதிர்தாக்குதல் நடத்தி அதனை நொறுக்கியுள்ளது. சீனாவின் தயாரிப்பான ஜெ-17 போர் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, அதனை இந்திய ராணுவம் தகர்த்திறிந்துள்ளது.
ஜம்மு & காஷ்மீர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள முக்கிய மாவட்டங்களில் முழு பிளாக் அவுட் போடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செயலாளர் மார்கோ ரூபியோ இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசினார். பதற்றத்தை உடனடியாகக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை செயலாளர் வலியுறுத்தினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி உரையாடலுக்கு அமெரிக்காவின் ஆதரவை அவர் தெரிவித்தார்.
மேலும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவித்தார். பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு செயலாளர் தனது இரங்கலை மீண்டும் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May 08, 2025 10:07 PM IST
”இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதியாக உள்ளது” – அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவிப்பு


