Last Updated:
நேற்று அடைந்த தோல்வியை தொடர்ந்து கொல்கத்தா அணி ஏறக்குறைய போட்டித் தொடரிலிருந்த வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான மேட்ச்சின் போது கொல்கத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விதிகளை மீறியதால் அவர் மீது அவருக்கு அபராதம் விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் கொல்கத்தா அணி ஏறக்குறைய போட்டியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த மேட்சில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சக்கரவர்த்தி சென்னை அணியின் டெவால்ட் ப்ரூவிசின் விக்கெட்டை கைப்பற்றினார். 25 பந்துகளை எதிர்கொண்ட ப்ரூவிஸ் 52 ரன்களை அதிரடியாக குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
அவரது விக்கெட்டை கைப்பற்றிய பின்னர் வருண் சக்கரவர்த்தி ஆக்ரோஷமாக ப்ரூவிசை நோக்கி சைகை செய்தார். இது ஐபிஎல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என நடுவர்கள் குறிப்பிட்டதை தொடர்ந்து பிசிசிஐ அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.


