Last Updated:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையின் கதவுகளை மூடியது உள்ளிட்ட இந்தியாவின் அதிரடி நடவடிக்கை, செனாப் நதியின் கீழ்நோக்கிய தண்ணீர் ஓட்டத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை இந்தியா கொடுத்துள்ள நிலையில், மறுபக்கம் 65 ஆண்டு கால பழமையான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
இதன்மூலம் பாகிஸ்தானுக்குள் செல்லும் செனாப் நதியின் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த முடிவின் தாக்கம் பாகிஸ்தானில் எதிரொலிக்கத் துவங்கிவிட்டதாக குறிப்பிடப்படும் இந்த நடவடிக்கை, ஏற்கனவே அந்நாட்டிற்கான பாதிப்புகளை வெளிப்படையான விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையின் கதவுகளை மூடியது உள்ளிட்ட இந்தியாவின் அதிரடி நடவடிக்கை, செனாப் நதியின் கீழ்நோக்கிய தண்ணீர் ஓட்டத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் படுகை பகுதியிலிருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஒரு காலத்தில் செனாப் நதியில் பெருக்கெடுத்து ஓடிய நீரோட்டத்தால் மூழ்கியிருந்த பகுதிகள் தற்போது வறண்டு போயிருப்பதைக் காண முடிவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தண்ணீர் வரத்து கணிசமாக குறைந்ததால் நீருக்கு அடியில் மறைந்திருந்த கற்கள் இப்போது வெளியே தெரிவதாகக் கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகள் தங்கள் மொபைல்களில் வழக்கத்திற்கு மாறான இந்த அசாதாரண காட்சியை படம்பிடிக்க ஆற்றங்கரைகளுக்கு திரண்டு வருகின்றனர். முன்பு இந்த இடம் மக்கள் புழங்குவதற்கு ஆபத்தானதாக இருந்தது. வெள்ளப்பெருக்கு அல்லது தீவிர நீரோட்டம் காரணமாக மக்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலைகூட அவ்வப்போது நிலவியது.
ஆனால், தற்போது ஆற்றின் நடுப்பகுதிக்கு குறுக்கே நடந்து செல்வதாக உள்ளூர் செய்தியாளர் பிலால் பாலி என்பவர் தெரிவித்தார். செனாப் நதி பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது, லட்சக்கணக்கான மக்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த நதி உள்ளது. 1960ஆம் ஆண்டு உலக வங்கி முன்னெடுப்பால் கையெழுத்தான சிந்து நதி ஒப்பந்தம், செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதிகள் மீது பாகிஸ்தானுக்கு கட்டுப்பாட்டை வழங்கியது. அதே நேரத்தில் ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகளின் மீதான உரிமைகளை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.
இந்த ஒப்பந்தம் குறிப்பாக மேற்கு நதிகளில் நீர்மின் திட்டங்களைக் கட்ட இந்தியாவை அனுமதித்தாலும், பாகிஸ்தானின் பயன்பாட்டை சீர்குலைக்கும் வகையில் நதிநீரின் ஓட்டத்தை மாற்றுவதை தடை செய்தது. ஆனால், தொடர்ந்து நிகழ்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், பஹல்காமில் சமீபத்தில் நடந்த தாக்குதலை காரணம் காட்டி, இந்த ஒப்பந்தம் தேசிய நலனுடன் ஒத்துப்போகவில்லை என்று கூறி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மூலோபாய வளமாக, பாதுகாப்பு சொத்தாகவும் உள்ள தண்ணீர் உரிமையில் கை வைத்தது இந்தியாவின் இறையாண்மை உரிமையை நிலைநாட்டும் செயலாகும் என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அதே சமயம் பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் இந்தியாவின் இந்த நடவடிக்கையை “ஒரு போர் நடவடிக்கை” என்று குறிப்பிட்டிருந்தார். “இந்தியா 240 மில்லியன் பாகிஸ்தானியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. இது வெறும் அரசியல் பிரச்சனை அல்ல – இது எங்கள் உயிர் வாழ்வைப் பற்றியது” என்று கூறினார். இந்தியாவின் அதிரடி நடவடிக்கையின் எதிரொலியாக ராம்பன் பகுதியில் ஒரு காலத்தில் சலசலக்கும் நதியாக இருந்த பல பகுதிகளில் தண்ணீர் தற்போது குறைவாக மற்றும் மெதுவாக ஓடுவது குறிப்பிடத்தக்கது.
May 07, 2025 10:00 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய நடவடிக்கை… கரைபுரண்டு ஓடிய நதியில் அடியோடு குறைந்த நீர்வரத்து…!


