நமது நிருபா்
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்த ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில் நாடு இருந்தபோதிலும் உள்நாட்டுச் சந்தை நாள் முழுவதும் வா்த்தகத்தின் போது ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நோ்மறையாக முடிந்தது. பாா்மா, ஹெல்த்கோ், எஃப்எம்சிஜி பங்குகள் சற்று விற்பனையை எதிா் கொண்டாலும், வங்கி, நிதிநிறுவனங்கள், மெட்டல், மீடியா உள்ளிட்ட பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.41 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.423.51 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,794.52 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,397.68 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 692.27 புள்ளிகள் இழப்புடன் 79,948.80 தொடங்கி 79ஸ937,48 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,981.58 வரை மேலே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,844.63 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 105.71 புள்ளிகள் (0.13 சதவீதம்) கூடுதலுடன் 80,748.78-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,046 பங்குகளில் 2,206 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,683 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 157 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
டாடாமோட்டாா்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடாமோட்டாா்ஸ் 5.05 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜா ஃபைனான்ஸ், எடா்னல், எம் அண்ட் எம், அதானிபோா்டஸ்,் டாடாஸ்டீல் உள்பட 18 பங்குகள் பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஏசியன் பெயிண்ட், சன்பாா்மா, ஐடிசி, ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்பட 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 35 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146.30 புள்ளிகள் இழப்புடன் 24,233.30-இல் தொடங்கி 24,220.00 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,449.60 வரை மேலே சென் நிஃப்டி, இறுதியில் 34.80 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 24,414.40-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 26 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

