Last Updated:
அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 24 மணி நேரமும் எல்லை பாதுகாப்பு படையினருடன் ராணுவத்தினரும் இணைந்து எல்லையை கண்காணித்து வருகின்றனர்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாநிலங்கள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்க்கலாம்
ஜம்மு காஷ்மீரின் பெகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு கடும் பதிலடியை இந்தியா கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை ஒருபக்கம் இருந்தாலும் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லையைப் பொறுத்தவரை, இந்தியா பாகிஸ்தானுடன் 3,323 கி.மீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, இது சர்வதேச எல்லை (IB) என்று அழைக்கப்படுகிறது. இது வடக்கு யூனியன் பிரதேசங்களிலிருந்து மேற்கு மாநிலமான குஜராத் வரை நீண்டுள்ளது.
இந்த எல்லையின் பல பிரிவுகள் சர்ச்சைக்குரிய பகுதிகளில் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) என்றும் குறிப்பிடப்படுகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 1222 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில எல்லையை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. இவை எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் உள்ளன. லடாக் பகுதியில் எல்லை 857 கிலோ மீட்டர் நீளமானதாக உள்ளது. பஞ்சாப் 425 கிலோ மீட்டர், ராஜஸ்தான் 1048 கிலோ மீட்டர், குஜராத் 512 கிலோ மீட்டர் எல்லையை சர்வதேச எல்லையில் (IB) பாகிஸ்தானுடன் பகிர்கிறது. இவற்றில சில கிலோ மீட்டர்களில் கூடுதல் குறைவு இருக்கலாம்.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 24 மணி நேரமும் எல்லை பாதுகாப்பு படையினருடன் ராணுவத்தினரும் இணைந்து எல்லையை கண்காணித்து வருகின்றனர்.


