மலாக்கா,
மலேசியா டிராவல் மார்ட், மலேசியா நைட் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் மலாக்கா தனது சுற்றுலா இலக்கை அனைத்துலகச் சந்தைக்கு விரிவுபடுத்துகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தொழில்துறைகளுக்கு உலகத் தரம்வாய்ந்த சுற்றுலாத் தயாரிப்புகளை
அறிமுகப்படுத்துவதற்கான பிரதான தளமாக மலாக்கா திகழ்கிறது என்று சுற்றுலா, பாரம்பரியம், கலை, கலாச்சாரத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ வீரா அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலத்திற்கு அதிகச் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் மாநில அரசின் விருப்பத்திற்கேற்ப இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் விளக்கமளித்தார்.
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், கப்பல் போக்குவரத்து, பயண முகவர்கள் போன்ற பல்வேறு சுற்றுலாத்துறை இத்திட்டத்தில் பங்கெடுக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். மத்தியக் கிழக்குச் சந்தைக்கு ஏற்ற பாரம்பரியம், கலாச்சாரம், பிரத்தியேக அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தன்னுடைய சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்த மலாக்கா இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறது என்று அவர் தமது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
முன்னதாக இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சுற்றுலா, கலை, கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தலைமையேற்றார். இதில் மலேசிய சுற்றுலாத்துறை தலைமை இயக்குநர் டத்தோ மனோகரன் பெரியசாமியும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின்போது 2025 உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவுக்கு மலாக்கா தலைமையேற்கிறது என்றும் அப்துல் ரசாக் தெரிவித்தார். இது வரும் 2026 மலாக்கா வருகை ஆண்டு
பிரச்சாரங்களுடன் இணைந்து அனைத்துலக சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மலாக்காவின் உறுதிப்பாட்டையும் இந்தப் பங்கேற்பு பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் பாபா ஹவுஸ் மலாக்கா, பார்க் ரோயல் ஆபாமோசா, மலாக்கா ரிசோர்ட்” ஆகியவற்றில் 3 பகல், 3 இரவுகள் தங்குவதற்கான இலவச கூப்பன்களை அதிர்ஷ்ட குலுக்கு வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம்.


