சிங்கப்பூரில் பணிபுரிந்த ஊழியரின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு S$240,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிஷான் டிப்போவில் ஏற்பட்ட விபத்தில் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் மரணித்தார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக நேற்று (மே 5) SMRT நிறுவனத்திற்கு S$240,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அது எடுக்கத் தவறியதால் இந்த விபத்து ஏற்பட்டதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், வேலையிட பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரயில் ஆபரேட்டர் நிறுவனத்திற்கு அபாரதம் விதிக்கப்பட்டதாக CNA மற்றும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.
என்ன நடந்தது?
2020 மார்ச் 23 அன்று, 30 வயதான முஹம்மது அஃபிக் பின் செனாவி, ரயில்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் பராமரிக்கப்படும் ரோலிங் ஸ்டாக் பட்டறையில் (rolling stock workshop) ஹைட்ராலிக் பிரஸ் இயந்திரத்தை இயக்கினார்.
அப்போது, இயந்திரத்திலிருந்து ஒரு கம்பி அவிழ்ந்து, இயந்திரத்தைச் சுற்றியுள்ள வேலியை உடைத்து அவரது முகத்தில் அடித்தது.
இதனை அடுத்து, டான் டோக் செங் மருத்துவமனைக்கு அஃபிக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்தார்.
அந்நிறுவனத்தில் அஃபிக் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர் பணிபுரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
நிறுவனமும், ஊழியர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
Top Photo: SMRT/Facebook
