மலாக்கா,
தன்னை தேடி வரும் பக்தர்களின் இன்னல்களை போக்கும் கண் கண்ட தெய்வமாய், காவல் தெய்வமாய் ஆயேர் சிமாகோக் டுரியான் துங்கால் எனும் சிற்றூரில் அருள் பாலித்து வருகிறாள் ஸ்ரீ அஷ்ட தச புஜ காளியம்மன்.
சரஸ்வதி, லட்சுமி, துர்கா என மூன்று அம்சங்களை கொண்ட பேசும் தெய்வமாகவும் கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுவாக அம்பாள் இங்கு அருளாசி வழங்குகிறார்.


அம்மா என அன்புடன் அழைப்பவர்களை தன்னுள் அரவணைத்துக் காக்கும் தேவியானவளுக்கு ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 8 ஜூன் 2025 , ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8.30 முதல் 10.00 மணிக்குள் விமரிசையாக நடைபெறவுள்ளது.
ஆலய ஸ்தாபகர் அருள்வாக்கு சித்தர் சிவ ஸ்ரீ சண்முக நாதன் சுவாமிகளின் அயராத முயற்சியிலும் ஆலயத் தலைவர் ஜெகன் அரவணைப்பாலும் பக்தர்கள், கொடை நெஞ்ஞர்கள் வழங்கிய ஒருங்கிணைந்த ஒத்துழைப்பிலும் ஆலயம் வரலாற்று மாநிலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணைப் பறிக்கும் அழகிய வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான வடிவில் இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 ஆண்டுகள் முன்பு இவ்வாலய திருப்பணி வேலைகள் தொடங்கி சிறுக சிறுக அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் மஹா கும்பாபிஷேகமும் காணவுள்ளது.
எங்கும் இல்லாத வகையில் அம்பாளின் இராஜ கோபுரத்தில் 7 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. அம்பாள் இராஜ அம்சம் கொண்டவள் என்பதை சித்தரிக்கும் வண்ணம் இக்கலசங்கள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது
இவ்வாலய இராஜ கோபுரம் 7 நிலையிலும் அம்பாளின் கோபுரம் 5 நிலையிலும் கட்டப்பட்டுள்ளது இங்குள்ள சிற்பங்களின், அனைத்து வேலைப்பாடுகளும் ஆகம முறைப்படி கட்டப்படுள்ளது. சிறு சிறு நுணுக்கமான சிற்ப வேளைகள் ஒவ்வொன்றும் மிக உண்ணிப்புடனும் கவனத்துடனும் செதுக்கப்பட்டுள்ளது


கர்ப்பக்கிரகம், கருவறை, அர்த்த மண்டபம், அர்த்த அர்த்த மண்டபம் என மூன்று நிலையில் எங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாக விளங்குகிறது.
இங்குள்ள ஒவ்வொரு சிலைகளும் மிக உயரமாகவும் மிகவும் கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு தூணிலும், நுட்பமான சிற்பக்கலை காணப்படுகிறது.
கோவிலில் நுழைந்ததும் தாமிர தகடு கவசமாக மேற் பகுதியில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. துவார பாலகிகள், நரசிம்ம அவதாரத்தில் காட்சி தருகின்றனர்.
உற்சவ மூர்த்தியாக கருவறையில் ஸ்ரீ அஷ்ட தச புஜ காளியம்மன் வீற்றிருக்க உள்ளார். , ஆலயத்தை காக்கும் காவல் தெய்வமாக கறுத்த உடலும், முறுக்கு மீசையும், மிக பெரிய கண்களுடன் வீச்சு அரிவாள் கையில் ஏந்தி 27 அடி உயரத்தில் கருப்பண்ணசாமி கம்பிரமாக ஆலய நுழை வாசலில் நிற்கிறார்.

உள் பிரகாரத்தில் மிக பெரிய வடிவில் கருங்கல்லில் சாமுண்டா காளி நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறாள். முனீஸ்வரன், பத்திரகாளி, சிலைகள் பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.
ஆலயத்தில் கால் பதித்தது, அங்கு பதிக்கப்பட்டுள்ள பளிங்கு கற்கள் ஆன்மீக அதிர்வலைகளை தூண்டி மனதிற்கு அமைதியையும் இதயத்தையும் தருகிறது.
புதிய ஆலயத்தில் மஹா லட்சுமி கருங்கல் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏனைய பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், ஆலயச் சுவரை சுற்றி காளியம்மனின் 8 ஆவதார உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரமாண்டமான ஆலயம் அம்பாள் அவளுக்கு வேண்டியதை அவளே அமைத்துக் கொண்டாள் என்பதுதான் நிதர்சனம் .
நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எழுந்தருளி கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயம் தொடர்ந்து ஒரு சமுதாய சேவை மையமாகவும் திகழும் என்பது அம்மா அவர்களின் கனவாக விளங்குகிறது.


