Last Updated:
விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் மரபுரக காய்கறி சந்தை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காய்கறி மரபுச் சந்தைகள் பாரம்பரிய ரக காய்கறிகள், பழங்கள், விதைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தைகளாகும். இந்த சந்தைகளில் ரசாயனம் கலக்கப்படாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றன. இது போன்ற பாரம்பரிய மரபுச் சந்தை சேலம் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக இயங்கி வருகிறது. இங்கு இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், தேன், தேங்காய் பூ, பதநீர், மூலிகை உணவு வகைகள் போன்ற இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சேலம் நகரப் பகுதியில் மரபுச் சந்தை இயங்கி வருவது நகரவாசிகளுக்கு மிகவும் உதவியாக அமைந்திருக்கிறது.
மரபுச் சந்தை குறித்து விவசாயிகள் கூறியதாவது; ” நாங்கள் ஒரு 10 ஆண்டுகாலமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு நீண்ட நாட்களாகவே மரபுச் சந்தை அமைத்து மக்களுக்கு நேரடியாக குறைந்த விலையில் தரமான காய்கறிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கம் இருந்து வந்தது. தற்போது, அது நிறைவேறி உள்ளது. நாங்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மரபுச் சந்தை என்ற ஒன்றை சாத்தியப்படுத்தி உள்ளோம். சேலம், சொர்ணபுரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 12 வாரங்களாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சந்தையை நடத்தி வருகிறோம்.
இந்த மரபுச் சந்தையின் நோக்கம் என்னவென்றால், மக்களுக்கு தேவையான தரமான காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணற்ற மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த சந்தை ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் குறைந்த அளவிலேயே மக்கள் கூட்டம் இருந்தது. ஆனால், தற்போது மக்கள் அதிக அளவில் வந்து விரும்பி காய்கறிகள், பழங்களை வாங்கி செல்கின்றனர். மக்கள் இடையே இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் எப்போது கிடைக்கும். அடுத்த வாரம் கிடைக்குமா? என்று கேட்கும் பொழுது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. அடுத்தடுத்து விளைபொருட்களை உருவாக்க எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவே எங்களது பெரும் வெற்றியாக பார்க்கிறோம். எங்களது முயற்சி இத்துடன் நிற்காது மேன்மேலும் நாங்கள் அடியெடுத்து முன்னேறி கொண்டு செல்வோம்” என்றார் விவசாயி.
Salem,Salem,Tamil Nadu
May 06, 2025 10:12 AM IST

