Last Updated:
குறிப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டபோது அற்புதமாக பந்து வீசிய வைபவ் அரோரா 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.
கடைசி வரை நீடித்த இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 53வது லீக் போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 3:30 மணி அளவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் குர்பாஸ் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். சுனில் நரேன் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ரகானே 30 ரன்களும் இளம் வீரர் ரகுவன்சி 44 ரன்கள் எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ரசல் மற்றும் ரின்கு சிங் இணை ரன்களை குவித்தது. ரசல் 25 பந்துகளில் 6 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்தார்.
ரின்கு சிங் 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அணி ராஜஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர்.
தொடக்க வீரர் சூர்யவன்ஷி 4 ரன்னிலும் அவரைத் தொடர்ந்து குணால் சிங் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 34 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். விக்கெட் கீப்பர் ஜுரல், ஹசரங்கா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர்.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் கேப்டன் ரியான் பராக் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 45 பந்துகள் எதிர்கொண்ட அவர் 8 சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 95 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
ஹெட் மேயர் 29 ரன்களும் சுபம் தூபே 25 ரன்களும் ஜோப்ரா ஆர்ச்சர் 12 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் அணி வெற்றி பெற 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் 2 சிக்சர் 1 பவுண்டரி அடிக்கப்பட்ட நிலையிலும் 20 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
குறிப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டபோது அற்புதமாக பந்து வீசிய வைபவ் அரோரா 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அடுத்த ரன்னுக்கு முயற்சித்த போது ஜோப்ரா ஆர்ச்சர் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
மிகவும் விறுவிறுப்பாக இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி திரில்லிங்கான வெற்றியை பெற்றது. இதன் மூலம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி தலா 5 போட்டிகளில் வெற்றி தோல்வியுடன் கைவிடப்பட்ட போட்டியில் பெற்ற ஒரு புள்ளி என மொத்தம் 11 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தில் உள்ளது. மேலும் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் கொல்கத்தா அணி தக்க வைத்து கொண்டுள்ளது.


