இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெதெல் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள்.
பில் சால்ட் இடத்தை நிரப்புவாரா என கேள்வி எழுந்த நிலையில், அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்திப்போனார் ஜேக்கப் பெதெல். பவர்பிளேவில் மட்டும் சுமார் 70 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 97 ரன்கள் ஆக இருந்தபோது ஜேக்கப் 33 பந்துகளில் 2 சிக்ஸர் 8 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரைசதம் கடந்த விராட் கோலி 33 பந்துகளில் 5 சிக்ஸர் 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். தேவதத் படிக்கல் 17 ரன்களும் பின்னர் வந்த ரஜத் படிதார் 11 ரன்களும் எடுத்தனர். ஜித்தேஷ் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
17.4 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்திருந்தபோது களமிறங்கினார் ரொமாரியோ ஷெப்பார்ட். ஒரு கட்டத்தில் 184 ரன்கள் தான் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலீல் அகமது வீசிய 19ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 33 ரன்களையும், பதிராணா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 21 ரன்கள் விளாசி இரு ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து 14 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார் ஷெப்பார்ட். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர் ஷேக் ரசீத் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆல் ரவுண்டர் சாம் கரன் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த ஜடேஜா, ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்த ஆயுஷ் மாத்ரே சதத்தை தவறவிட்டார்.
அப்போது கடைசி 2 ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனி – ஜடேஜா என அதிரடி பினிஷர்கள் இருந்ததால், சென்னை அணியின் பக்கமாகவே வெற்றி சாதகமாக இருந்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால் யாஷ் தயால் வீசிய 3ஆவது பந்தில் தோனி அவுட் ஆக, மீண்டும் 2024 மே 18ஆம் தேதி அனைத்து சென்னை ரசிகர்களின் மனதிலும் வந்து போனது. ஆனால் இதையடுத்து வந்த ஷிவம் துபேவிற்கு நோ-பால் வாய்ப்பு கிட்டியது. அதிரடியாக அவர் பந்தை பறக்கவிட, கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இரண்டு பேட்ஸ்மேன்களாலும் அந்த 6 ரன்களை எடுக்க முடியாமல் அந்த ஓவரில் மொத்தமாகவே 12 ரன்கள் தான் சேர்க்க முடிந்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஆர்சிபி பேட்டிங் செய்யும்போது, கடைசி 2 ஓவர்களில் 54 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால் சென்னை அணியால் கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, இந்த தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக தெரிவித்தார்.
Bangalore,Karnataka

