Last Updated:
பெங்களூரு அணி நல்ல ஃபார்மில் இருப்பதால் இன்று முழு ஆட்டம் நடைபெற்றால் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த போட்டியின் போது மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நடப்பு சீசனில் முதல் அணியாக சென்னை தொடரை விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீதம் இருக்கும் 4 போட்டிகளில் சென்னை வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியின் போது பெங்களூரு அணியை சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இன்று பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துமா? அல்லது ஆர்சிபி சேப்பாக்கம் தோல்விக்கு பழி தீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தை சுற்றிய பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், 8 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வேளை போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி நல்ல ஃபார்மில் இருப்பதால் இன்று முழு ஆட்டம் நடைபெற்றால் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படாத நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிராக அவர் விளையாடும் கடைசி போட்டியாகவும் இது இருக்கலாம் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.


