Last Updated:
கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தடைகளை ஏஐ தொழில்நுட்பம் தகர்த்தெறிகிறது.
உலகின் பொழுதுபோக்கு மையமாக இந்தியா மாறும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சேர்மேன் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES 2025) நேற்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
4-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் சர்வதேச வல்லுநர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். தனது பிசியான வேலைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். வேவ்ஸ் மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது,
“மும்பை நகரமானது இந்தியாவின் இப்போது போக்கின் மையமாக உள்ளது. உலகின் பொழுதுபோக்கு மையமாக இந்தியா மாறக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கான ஒரு நீண்ட பயணத்தின் தொடக்கமாக இந்த மாநாட்டை கருதலாம்.
உலகளாவிய பொழுதுபோக்கு துறைக்கு இந்த மாநாடு ஒரு எதிர்கால மைல்கல்லாக இருக்கும் என்று நம்புகிறேன். கலைகளும் கலாச்சாரங்களும் உலகை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கின்றன. நாம் ஊடக மறுமலர்ச்சியின் சகாபத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பல தரமான உருவாக்கங்கள் ஆசியாவில் நடைபெறும் என்று நம்புகிறேன்.
ஏஐ தொழில்நுட்பம் பொழுதுபோக்கு மற்றும் ஊடக துறையிலும் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவரும். கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தடைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் தகர்த்தெறிகிறது. நாம் கற்பனையில் செய்யக்கூடியதை இந்த ஏஐ தொழில்நுட்பம் காட்சியாக வடிவமைத்து கொடுக்கிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, இன்றைக்கு இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 28 பில்லியன் டாலராக இருப்பதாக கூறிய அவர், இந்த துறை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 100 பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாறும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
WAVES 2025 : ‘உலகின் பொழுதுபோக்கு மையமாக இந்தியா மாறும்’ – ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி நம்பிக்கை


