Last Updated:
Mary Kom: கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் மோசமான சூழலை அனுபவித்து வருவதாக மேரி கோம் கூறியுள்ளார்.
குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒலிம்பிக் வீராங்கனை மேரி கோம், கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மணிப்பூரை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், தனது கணவர் ஓன்கோலரை பிரிந்து, ஹிதேஷ் சவுத்ரி என்ற தொழிலதிபருடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம், மற்றொரு குத்துசண்டை வீராங்கனையின் கணவருடன் மேரி கோம் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மேரி கோம்.
அதில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது கணவர் ஓன்கோலரை தங்கள் “கோம்” இன வழக்கப்படி விவாகரத்து செய்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும், ஹிதேஷ் சவுத்ரிக்கும் தனக்கும் வர்த்தகத்தை தாண்டி எவ்வித உறவும் இல்லை என்றும் மேரி கோம் தெளிவுப்படுத்தி உள்ளார். அத்துடன், தான் யாருடனும் டேட்டிங் செய்யவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் மோசமான சூழலை அனுபவித்து வருவதாக கூறியுள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட மேரி கோம்-ஓன்கோலர் தம்பதிக்கு, இரட்டை மகன்கள், ஒரு மகள் உட்பட 4 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


