Last Updated:
அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 5வது மாடியில் இருந்து குதித்த பெண்ணின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெண் கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அகமதாபாத்தின் இந்திரா பாலம் பகுதியில் உள்ள அட்ரே ஆர்க்கிட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தொடங்கிய தீ விரைவில் ஐந்தாவது மாடியை அடைந்தது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க 5வது மாடியில் இருந்து இளம் பெண் குதித்த உயிர் தப்பினார். அந்த இளம் பெண் கீழே குதித்துக் கொண்டிருந்தபோது, கீழே சுமார் 20 முதல் 25 பேர் வலை அல்லது துணி போன்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டிருந்தனர், அந்த இளம் பெண் நேராக அதில் விழுந்தார். கீழே குதித்ததில் சிறு காயங்கள் ஏற்பட்டத்துடன் மரணத்திலிருந்து தப்பித்தார். மேலும், தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்தில் உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது, பால்கனியில் இருந்து பெயர் குறிப்பிடப்படாத இளம் பெண் ஒருவர் கீழே குதித்தார். அப்போது தரையில் காத்திருந்தவர்கள் அவரை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கட்டிடத்திலிருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் எரிவதையும், கருப்பு புகை மூட்டங்கள் வானத்தில் எழுவதையும் காணலாம்.
மற்றொரு வீடியோவில், ஒருவர் சிறுமியை பால்கனியில் இருந்து இறக்கிவிடுவதையும், அந்த பால்கனிக்கு கீழ் உள்ள மற்றொரு பால்கனியின் கார்னரில் இருந்த ஒருவர் அந்தச் சிறுமியைப் பிடித்துக் கொள்வதையும் காணலாம். இது தவிர, எரியும் கட்டிடத்திலிருந்து தப்பிக்க ஒரு பெண் கயிற்றைப் பயன்படுத்தி கீழே இறங்குவதையும் காணலாம். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ ஆனது அடுக்குமாடி குடியிருப்பின் ‘சி’ மற்றும் ‘டி’ பகுதிகளில் பரவலாகப் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முதற்கட்ட விசாரணையில், ஏசியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிக்கொண்ட மக்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து தங்களையும், தங்கள் குழந்தைகளையும் எப்படியோ காப்பாற்றிக் கொண்டனர்.
April 30, 2025 8:23 PM IST


