Last Updated:
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறும்
சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் முக்கிய ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல் இடம் பெறவில்லை. அவர் இந்தத் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாதிக்கும் அதிகமான போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பதில் ஓரளவு தெளிவு கிடைத்துள்ளது. சென்னை, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறாவிட்டாலும், தற்போதைய சூழலில் இந்த மூன்று அணிகளால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
மற்ற 7 அணிகளில் 4 அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதை அடுத்து சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல்லின் ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அவர் இந்தத் தொடரில் மொத்தமே 41 ரன்கள் எடுத்துள்ளார். பலமுறை அணிக்கு மேட்ச் வின்னராக இருந்த அவர் தற்போது அணிக்கு சுமையாக மாறி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம்பெறவில்லை.
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேக்ஸ்வெல் இந்தத் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தரவரிசைப் பட்டியலைப் பொறுத்த அளவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் முடிவு அறிவிக்கப்படாத காரணத்தினாலும் மொத்தமாக 11 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் இரண்டாம் இடத்துக்கு முன்னேறும்.
April 30, 2025 7:48 PM IST


