வைரலாகி வரும் இந்த வீடியோவில், தாடி வைத்த ஒருவரின் தலைமையில் மூன்று நபர்கள் சால்வை விற்பனையாளர்களை மீண்டும் மீண்டும் அடித்தும், அவர்களை நோக்கியும் கத்துகிறார்கள். விற்பனையாளர்களில் ஒருவர் தாங்கள் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க தனது ஆதார் அட்டையை அவர்களிடம் காட்டினார். ஆனாலும் அவர் உள்ளூர்வாசிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டார்.
மேலும் அந்த நபர்கள், பொருட்களைக் கட்டிக்கொண்டு விற்பனையாளர்களை வெளியேறச் சொன்னார்கள். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகும் அவர்களை அறைந்து கொண்டே இருந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, உத்தரகண்ட் காவல்துறையினர் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர். அவர்கள் தெஹ்ரி கர்வாலைச் சேர்ந்த சூரஜ் சிங், ஹாதிபானைச் சேர்ந்த பிரதீப் சிங் மற்றும் முசோரியின் கம்பெனி கார்டன் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் உனியல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தின் (JKSA) தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி, தாக்குதல் நடத்தியவர்கள் “பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள்” என்று குற்றம் சாட்டினார்.
“உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் இருந்து இரண்டு காஷ்மீர் சால்வை விற்பனையாளர்கள் பஜ்ரங் தள உறுப்பினர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட ஆழ்ந்த கவலையளிக்கும் மற்றும் உறைய வைக்கும் தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன” என்று குஹேஹாமி தனது சோசியல் மீடியா பதிவில் கூறியுள்ளதோடு, தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் முசோரியில் உள்ள குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 16 காஷ்மீர் வர்த்தகர்களும் “அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, குடியிருக்கும் வாடகை வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்” என்றும் ஜே.கே.எஸ்.ஏ தேசிய ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
“இவர்கள் புதியவர்கள் அல்ல. பலர் பல ஆண்டுகளாக முசோரியில் வணிகம் செய்து சால்வைகளை விற்று வருவதோடு, உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்தும் சமூகத்திற்குள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.
“குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று உத்தரகண்ட் டிஜிபி தீபம் சேத் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் குற்றவாளிகள் தங்கள் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தையை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர். அவர்கள் மீது காவல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று குவேஹாமி மேலும் கூறினார்.
April 30, 2025 8:55 PM IST

