Last Updated:
Coconut Price Hike| தேங்காய் வரத்து அதிகரித்த பின்னரே விலை குறைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
சேலம் மார்க்கெட்களுக்கு தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் தேங்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் 55 முதல் 70 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தேங்காய் வரத்து அதிகரித்த பின்னரே விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பூந்துறை, வெள்ளோடு, அரச்சலூர், காங்கேயம், ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், பர்கூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் தேங்காய் பறிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மழையின்மை, தென்னை மரங்களில் நோய் பாதிப்பு காரணமாக தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக, சேலம் சந்தைகளில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சில்லறை விலையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக தேங்காய் விளைச்சல் பாதிப்பு காரணமாக தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. சேலம் சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ தேங்காய் ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையானது. தற்போது ரூ.70 ரூபாய் வரையிலும் விற்பனை ஆகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது: “சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் நாங்கள் 15 வருட காலமாக தேங்காய் விற்பனை செய்து வருகிறோம். இதுவரையிலும் இவ்வளவு விலை உயர்ந்தது இல்லை. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவு உள்ளன. இப்பகுதியில் இருந்துதான் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது இங்கெல்லாம் விளைச்சல் குறைவு காரணத்தால் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் தென்னை மரங்களில் போதுமான காப்பு இல்லாததாலும், போதிய மழை இல்லாததும் காரணமாக பார்க்கப்படுகிறது. நிலைமை இப்படியே இருந்தால் ஒரு கிலோ தேங்காய் 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்தனர் வியாபாரிகள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 28, 2025 2:57 PM IST

