Singapore Restaurant: சிங்கப்பூரில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல நியூ சிசர்-கட் கறி ரைஸ் (New Scissor-Cut Curry Rice) உணவகம் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
669 கேலாங் சாலையில் உள்ள அந்த உணவகம் கடைசியாக மே 12 ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடையை மூடப்போவதாக உணவகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 14 அன்று அறிவித்தது.
இந்த அறிவிப்பு உணவகத்தின் தினசரி வாடிக்கையாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் பதிவில் கூறியதாவது;
“முக்கியமான அறிவிப்பு ஒன்றை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். பல சவால்கள் காரணமாக, 30 ஆண்டுகளாக சேவையை வழங்கிய எங்கள்உணவகத்தை மூடுவது என்ற கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளோம்.”
“உணவகம் கடைசியாக 2025 மே 12 ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும்.”
“கடந்த மூன்று தசாப்தங்களாக நீங்கள் கொடுத்த விசுவாசத்திற்கும் ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களுக்கு சேவை வழங்கியதை உண்மையிலேயே பெருமையாக கருதுகிறோம்.”
“எங்களின் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிக்க நன்றி” என்றும் அந்நிறுவனம் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

மோசமான வியாபாரம், அதிக வாடகை
இதற்கான காரணத்தை கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளரிடம் அந்த உணவக உரிமையாளர் கூறியுள்ளார்.
அதாவது, 2024 முதல் கடையின் வியாபாரம் 50 சதவீதமாக குறைந்ததாகவும், அதனால் தொடர்ந்து கடையை நடத்துவது கடினமாக இருப்பதாகவும் கடையின் உரிமையாளர் கூறியதாக வாடிக்கையாளர் கூறினார்.
வழக்கமாக கடை தினமும் காலை 9:30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை திறந்திருக்கும்.
மோசமான வியாபாரம் மட்டுமல்லாமல், கடைக்கும் அதிக வாடகை உள்ளிட்ட பல காரணங்களால் தனது முதலாளி கடையை மூட முடிவு செய்துள்ளதாக கடை ஊழியர் ஒருவர் மதர்ஷிப் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடையை மீண்டும் திறக்கும் திட்டம் இல்லை
மேலும், உணவகத்தை வேறு எங்கும் மீண்டும் திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கடை முகவரி
New Scissor-Cut Curry Rice Restaurant
669 கேலாங் சாலை, சிங்கப்பூர் – 389596
தினமும் காலை 9:30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கடை இயங்கும்.
Top Photo: Timezone Watch Trading/Google

