Last Updated:
வெள்ளி பொருட்கள் உற்பத்திக்கு பெயர்போன சேலம் மாவட்டத்தில் அட்சய திருதியை சுபமுகூர்த்த தினத்தில் ஆடர்கள் குறைவாக உள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடுகிறோம். அட்சய திருதியை அன்று சுபமுகூர்த்த நாள் ஆகும். இந்த நாளில் தொடங்கும் செயல்கள் யாவும் வளரும். வாங்கும் பொருட்கள் யாவும் பெருகும். செய்யும் தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களை அருளும் என்பது நம்பிக்கை. எனவே, இந்நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்குவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கம் ஒரு புறம் விலை உயர்ந்து கொண்டே இருக்க மறுபுறம் வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படி இருக்கையில் அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வெள்ளி வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வியாபாரியில் மிகவும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக சொல்லப் போனால் சேலம் மாவட்டம் வெள்ளி தொழிலுக்கு பெயர் பெற்றது. சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் அதிகளவில் வெள்ளித் தொழில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே கோடி கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இத்தொழிலில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் தயார் செய்யப்படும் வெள்ளி கொலுசுகள் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் காரணம் சேலத்தில் சில சிறந்த தரத்தில் வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பொருட்கள் தயார் செய்வது ஆகும். தற்போது வெள்ளி விலை ஏற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் மத்தியில் வெள்ளி வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. அட்சய திருதியை நன்நாளில் பெருமளவில் வர்த்தகம் நடைபெறும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் வராதது வியாபாரிகளுக்கு பெரும் ஏமாற்றமாகஇருப்பதாக தெரிவித்தனர்.
Salem,Salem,Tamil Nadu
April 30, 2025 10:40 AM IST

