Last Updated:
கனடா நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி, ஜூவனிடா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கனடா நாடாளுமன்ற தேர்தலில் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் உட்பட தமிழர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கனடாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 343 இடங்களுக்கு திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. ஆளும் லிபரல் கட்சியின் சார்பில், மார்க் கார்னி பிரதமர் வேட்பாளராக களமிறங்கினார். லிபரல் கட்சிக்கு போட்டியாக கன்சர்வேட்டிவ் கட்சி, பெர்ரி பொய்லிவ்வை போட்டியிட்டார். பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவைப்படும் நிலையில், லிபரல் கட்சி 165க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி 145 இடங்களில் வென்றது.
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்த கட்சியும் நேரடியாக பெறாத நிலையில், சிறிய கட்சிகளின் கூட்டணியுடன் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வான பிறகு கனடா மீது அதிக வரியை விதித்து அதிர்ச்சி அளித்த நிலையில், அமெரிக்காவின் அழுத்தம் நடப்புத் தேர்தலில் மிக முக்கியமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ஆளும் லிபரல் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
கனடா பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 6 பேர் போட்டியிட்டனர். தமிழர்களில், ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் 3 பேரும், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் இருவரும், பசுமை கட்சியின் சார்பில் ஒருவரும் களமிறங்கினர். முன்னாள் அதிபர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் கட்சியான லிபரல் கட்சி சார்பில் ஒக்வில் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சென்னையை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்த், 50 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதே போல, லிபரல் கட்சி சார்பில் தற்போது எம்பியாக உள்ள இலங்கை தமிழரான ஹரி ஆனந்தசங்கரி ஸ்கார்பரவ்ப் பார்க் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார். மார்க்ரம் நகர கவுன்சிலராக இருந்த இலங்கை தமிழரான ஜூவனிடா நாதன்(Juanita Nathan) தற்போது பிக்கெரிங் புரூக்ளின்(Pickering-Brooklin) தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாகியுள்ளார். லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதால், அனிதா ஆனந்த் மற்றும் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 30, 2025 7:00 AM IST
கனடா நாடாளுமன்ற தேர்தல்.. தமிழர்கள் 3 பேர் வெற்றி.. சென்னையை சேர்ந்தவருக்கு அமைச்சர் வாய்ப்பு?


