Last Updated:
கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய குஜராத் பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் பாஜக எம்பி-யுமான கவுதம் கம்பீருக்கு, கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில் குஜராத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் உட்பட, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான கணக்கிலிருந்து கவுதம் கம்பீருக்கு மிரட்டல் விடுத்து 2 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் “நான் உன்னை கொல்லப்போகிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கம்பீர் ரஜிந்தர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குஜராத்தைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவர் ஜிக்னேஷ் சிங் பர்மர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணியில் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர்..! எப்படி தெரியுமா?
மாணவரின் பெற்றோர் அவருக்கு சிறிது மனநலப் பிரச்சினை இருப்பதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்றும், ஏற்கெனவே 2022ம் ஆண்டு இதேபோன்ற கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கம்பீர் ஏற்கெனவே டெல்லி போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
April 29, 2025 2:49 PM IST


