ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு டாடா அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நோயல் டாடா, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆலு மிஸ்திரியை மணந்துள்ளார். நோயல் மற்றும் ஆலு தம்பதியருக்கு லியா டாடா, மாயா டாடா மற்றும் நெவில் டாடா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் நெவில் இரண்டாவதாக பிறந்தவர்.
நெவில் டாடா, புனேவின் கிர்லோஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்த மானசி கிர்லோஸ்கரை 2019-ம் ஆண்டு மணந்தார். இந்த நிகழ்வில் ரத்தன் டாடா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குழு மட்டுமே கலந்து கொண்டது. கிர்லோஸ்கர் குடும்பம் பிரபலமான கிர்லோஸ்கர் குழுமத்தை நிர்வகிக்கும் வணிகக் குடும்பம் ஆகும்.
யார் இந்த மானசி கிர்லோஸ்கர்?:
ஆகஸ்ட் 7, 1990-ல் பிறந்த மானசி கிர்லோஸ்கர், முக்கிய வணிகக் குடும்பமான கிர்லோஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1888-ம் ஆண்டு லட்சுமண்ராவ் கிர்லோஸ்கரால் நிறுவப்பட்ட கிர்லோஸ்கர் குழுமத்திற்கும், டாடா குழுமத்திற்குன் இடையே நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. மானசி அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் நுண்கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டில், தெற்கு மும்பையின் கொலாபாவில் உள்ள ரத்தன் டாடாவின் வீட்டில் வைத்து நெவில் டாடாவை மணந்தார். மானசி மற்றும் நெவில் தம்பதியருக்கு ஜாம்செட்ஜி டாடா என்ற மகனும் தியானா டாடா என்ற மகளும் உள்ளனர்.
2023-ம் ஆண்டில், அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, மானசி கிர்லோஸ்கர் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பாகங்கள் (TKAP) மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) ஆகியவற்றின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். டொயோட்டா இஞ்சின் இந்தியா லிமிடெட் (TIEI), கிர்லோஸ்கர் டொயோட்டா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் (KTTM), டொயோட்டா மெட்டீரியல் ஹேண்ட்லிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் (TMHIN) மற்றும் டெனோ கிர்லோஸ்கர் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் (DNKI) ஆகியவற்றின் தலைவராகவும் அவர் பதவி வகிக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் பட்டம் பெற்ற மானசி டாடா, டொயோட்டா உற்பத்தி செயல்முறைகள் மற்றும் ஜப்பானிய பணி கலாச்சாரத்தை நன்கு அறிந்தவர். கிர்லோஸ்கர் சாம்ராஜ்ஜியத்தின் ஐந்தாவது தலைமுறை வாரிசான மானசி, கலை ஆர்வம் மிக்கவர். மேலும் அவரது தன்னார்வ தொண்டு நிறுவனமான “கேரிங் வித் கலர்” மூலம் இந்த ஆர்வத்தை கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுத்துகிறார். தொழிலில் பல சாதனைகள் புரிந்த மானசி கிர்லோஸ்கர், ஒரு திறமையான கலைஞரும் கூட. அவருக்கு 13 வயதாக இருந்தபோது அவரது கலைப்படைப்புகள் ஒரு கண்காட்சியில் இடம்பெற்றன.
மானசி கிர்லோஸ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு?:
மானசி கிர்லோஸ்கரின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வுளவு என்று பொதுவில் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும், இவர்தான் கிர்லோஸ்கர் குழுமத்தின் வாரிசு ஆவார். இக்குழுமத்தின் மதிப்பு ரூ.15,600 கோடி. இந்தப் பதவி அவரை இந்தியாவின் பணக்காரப் பெண்களில் ஒருவராக ஆக்குகிறது.
April 29, 2025 4:46 PM IST
ரூ.15,600 கோடி சொத்துக்கு அதிபதி.. இந்தியாவின் டாப் பணக்காரப் பெண்.. யார் இந்த மானசி கிர்லோஸ்கர்?

