Last Updated:
தனது 100 நாட்களில் 24 நிர்வாக உத்தரவுகள், 22 குறிப்பாணைகள், 20 பிரகடனங்கள், 28 மசோதாக்கள் வெளியிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் டொனால்ட் ஜான் டிரம்ப். இரண்டாவது முறையாக அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்பின் “America First” முழக்கத்திற்கு அந்நாட்டு மக்கள் கொடுத்துள்ள ஒப்புதல் மதிப்பு 37 சதவிகிதம் தான். கடந்த 70 ஆண்டுகளில், எந்த ஒரு அதிபரும் பெற்றிராத குறைவான ஒப்புதல் மதிப்பை பெற்று தேர்தலில் வெற்றிபெற்றார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் 34-வது அதிபர் ட்வைட் ஐசனோவருக்கு (Dwight Eisenhower) பிறகு டிரம்ப் தான் தனது 100- நாள்கள் ஆட்சியில் மிகக் குறைந்த ஒப்புதல் மதிப்பெண்களை பெற்ற அதிபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். ஜனவரி 20- ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், தனது முதல் 100 நாட்களில் 24 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 22 குறிப்பாணைகள், 20 பிரகடனங்கள் மற்றும் 28 மசோதாக்களில் கையெழுத்திட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட பெரும்பாலான நிர்வாக உத்தரவுகள் சர்ச்சைக்கு வித்திட்டன. திருநங்கைகள் பாதுகாப்பு சட்டங்களை நீக்கி, அமெரிக்க அரசு ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்தார். மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றம் செய்தார்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, பெற்றோர் எந்த நாட்டவராக இருந்தாலும் குழந்தை அமெரிக்க மண்ணில் பிறந்தால் அதற்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த முறையை மாற்றி உத்தரவிட்டார். உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருப்பவர்களை நாடு கடத்த உத்தரவிட்டார். அதிலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கை, கால்கள் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பைடன் ஆட்சியில் 10 லட்சம் வெளிநாட்டவர்கள் சட்டப்பூர்வமாக குடியேற வாய்ப்பு வழங்கிய CBP One செயலியை நீக்கி அதிரடி காட்டினார்.
டிரம்பின் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய உத்தரவு அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது. டிரம்பின் நண்பர் எலான் மஸ்க்கின் அரசின் திறன் துறையின் பரிந்துரையை ஏற்று 2 லட்சத்து 75 ஆயிரம் ஊழியர்களை பதவியிலிருந்து நீக்கினார் அதிபர் டிரம்ப். இந்த உத்தரவு குடியரசு கட்சியினரையே அதிருப்திக்கு ஆளாக்கியது.
இது மட்டுமல்லாமல் உலக பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்தது டிரம்பின் பதிலுக்குப் பதில் வரி விதிப்பு. இந்தியாவுக்கு 26 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். டிரம்பின் உத்தரவால் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டு முதலீட்டாளர்கள் 10 லட்சம் கோடி டாலர்களை இழந்தனர். இந்த பதிலடி வரி விதிப்பை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும் அதற்குள் உலகம் முன் எப்போதும் இல்லாத பாதிப்பை சந்தித்து விட்டது.
இதையும் படிக்க: கனடா தேர்தல் 2025: லிபரல் கட்சி முன்னிலை.. மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி?
வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடன் வாக்குவாதம், ஹார்வர்ட் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களுக்கு நிதி நிறுத்தம், கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்வேன், கீரின்லாந்தை வாங்குவேன், காசா மக்களை வெளியேற்றிவிட்டு அதனை சுற்றுலா தலமாக மாற்றுவேன் என டிரம்பின் பல பேச்சுகளை அவரது குடியரசுக் கட்சி காரர்களே விரும்பவில்லை. எலான் மஸ்க்கிற்கு டிரம்ப் அளிக்கும் அதீத முக்கியத்துவத்தையும் அமெரிக்க மக்கள் ரசிக்கவில்லை.
டிரம்பின் கொள்கைகளை எதிர்த்து “50 போராட்டங்கள் – 50 மாகாணங்கள் – 1 நாள்,” அதாவது 50-50-1 என்ற அமைப்பு பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை இந்த அமைப்பு நடத்திய போராட்டத்தில் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் சுமார் 1 கோடி பேர் பங்கேற்றனர். அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு அதிபரும் சந்தித்திராத எதிர்ப்பை 100 நாட்களிலேயே சந்தித்து விட்டார் டிரம்ப்.
April 29, 2025 1:56 PM IST
Donald Trump | பதிலுக்கு பதில் வரி..! அதிரடி அறிவிப்புகள்..! எப்படி இருந்தது அதிபர் டிரம்பின் 100 நாட்கள்?


