Last Updated:
Pakistan minister Khawaja Asifs | பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்பின் எக்ஸ் பக்கத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது. 16 பாகிஸ்தானிய யூடியூப் பக்கங்களும் தடைசெய்யப்பட்டன.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃபின் எக்ஸ் பக்கத்தை இந்திய அரசு முடக்கியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு உலக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியாவும், பதிலுக்கு இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தானும் நிறுத்தியுள்ளன. மேலும் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அடாரி – வாகா எல்லை மூடல் உள்ளிட்ட அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு செய்து வருகிறது. பாகிஸ்தானிய குடிமக்களின் குறுகிய கால விசாக்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தையும் இந்திய அரசு முடக்கியது. தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) இந்தியாவில் 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டன. இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பியதாகக் கூறி, மொத்தம் 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை மத்திய மோடி அரசு தடை செய்துள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் அண்மையில் இந்திய அரசை கண்டித்து பேட்டி ஒன்றை அளித்தார். அதில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததாகக் கூறி, மத்திய அரசு சார்பில் எக்ஸ் நிறுவனத்திடம் முறையிடப்பட்டது.
இதையடுத்து கவாஜா ஆசிஃப்பின் எக்ஸ் பக்கத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது.
இதனிடையே பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் புதன் கிழமை நடைபெற இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 29, 2025 3:40 PM IST
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் எக்ஸ் பக்கத்தை முடக்கியது இந்திய அரசு… காரணம் என்ன?


