பெண்ணின் கைகால்களை துணியால் கட்டி போட்டு கொள்ளையடித்ததாக இரண்டு இந்தியர்கள் மீது நேற்று (ஏப்ரல் 28) சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இதில் ஆரோக்கியசாமி டைய்சன் (22) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (28) ஆகியோர் மீது தலா ஒரு கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது, மேலும் அவர்கள் மத்திய காவல் பிரிவில் ரிமாண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று மாலை 7 மணி வாக்கில், ஜாலான் பெசாரில் உள்ள அம்ரைஸ் ஹோட்டல் கிச்சனரில் உள்ள அறை ஒன்றில் 38 வயது பெண்ணின் கைகளையும் கால்களையும் கட்டி போட்டதாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் பெண்ணின் முகத்தில் அறைந்து துன்புறுத்தியதாகவும், பின்னர் அவரது பாஸ்போர்ட், வங்கி அட்டைகள் மற்றும் S$2,000 ரொக்கம் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அன்று இரவு 9 மணியளவில் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் வந்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், மத்திய காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களின் அடையாளங்களை கண்டுபித்தனர், பின்னர் புகார் அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து பெண்ணின் அனைத்து உடைமைகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காயம் ஏற்படுத்தி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிக்கு ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

