Last Updated:
இதன் மூலம் தரவரிசை பட்டியலில் ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 47 ஆவது லீக் ஆட்டமாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்ஷன் – சுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தை அணிக்கு கொடுத்தது. 30 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்த சாய் சுதர்ஷன் கில்லுடன் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
கில் 50 பந்துகளில் 4 சிக்சர் 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் அதிரடியாக 26 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவரை மிஞ்சும் வகையில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடி குஜராத அணியை சின்னாபின்னமாக்கினார்.
35 பந்துகளில் சதம் அடித்த அவர் 38 பந்துகளில் 11 சிக்சர் 7 பவுண்டரியுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து நிதிஷ் ராணா 4 ரன்னில் ஆட்டமிழக்க யஷஸ்வி ஜெய்வால் 40 பந்துகளில் 70 ரன்னும், ரியான் பராக் 15 பந்துகளில் 32 ரன்களும் சேர்த்த நிலையில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தரவரிசை பட்டியலில் ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறியிருக்கும் என்ற நிலையில் தோல்வி காரணமாக 3 ஆவது இடத்தில் உள்ளது.
April 28, 2025 11:49 PM IST


