Last Updated:
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மாநில அந்தஸ்து கோர மாட்டேன் என வருத்தம் தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மாநில அந்தஸ்து கோரப் போவதில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், நாடே துக்கத்தில் இருக்கும்போது, மாநில அந்தஸ்து கோர மாட்டேன் என்றும், வேறு சமயத்தில் அது குறித்து பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, “கடந்த காலங்களில் இதுபோன்ற பல தாக்குதல்களை கண்டிருக்கிறோம். ஆனால், பைசரனில் இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டு 21 ஆண்டுகள் ஆகின்றன. இறந்தவர்களின் குடும்பங்களிடத்தில் எப்படி மன்னிப்பு கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவது எனது கடமை. என்னால் அதைச் செய்ய முடியவில்லை. மன்னிப்பு கேட்க எனக்கு வார்த்தைகள் இல்லை.
பஹல்காமுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று நான் எந்த முகத்துடன் கேட்க முடியும்? என்னுடைய அரசியல் அவ்வளவு மலிவானதா? கடந்த காலங்களிலும் மாநில அந்தஸ்து பற்றிப் பேசியிருக்கிறோம், எதிர்காலத்திலும் அப்படித்தான் செய்வோம். ஆனால் 26 பேர் இறந்துவிட்டார்கள், இப்போது எனக்கு மாநில அந்தஸ்து கொடுங்கள் என்று மத்திய அரசிடம் நான் சொன்னால் அது எனக்கு அவமானமாக இருக்கும்.
மக்கள் நம்மை ஆதரிக்கும்போது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் முடிவுக்கு வரும். இது அதன் ஆரம்பம். துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மக்கள் நம்மை ஆதரிக்கும்போது மட்டுமே அது முடிவுக்கு வரும்” எனத் தெரிவித்தார்.
Jammu and Kashmir
April 28, 2025 5:12 PM IST
Pahalgam Attack : “சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பாக நான் திருப்பி அனுப்பவில்லை..” – வருந்திய உமர் அப்துல்லா


