கம்பீரமான கட்டிடக்கலை முதல் உயர்தர சேவைகள் வரை, பெயர் பெற்ற இந்த விமான நிலையம், அதன் ஆடம்பரமான வசதிகளுக்கு மட்டுமல்லாமல் அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையாலும் வசதியானதாக கூறப்படுகிறது. பிரபலமான உணவகங்கள் முதல் சிறிய கஃபேக்கள் வரை என அனைத்து உணவகங்களிலும் விதவிதமான உணவுகள் உங்களை கவர்ந்தாலும், அந்த உணவுகளின் விலை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதாவது, இந்த விமான நிலையத்தில் ஒரு நேரத்திற்கு சாப்பிட செலவழிக்கும் பணத்தை வைத்து விமான நிலைய வளாகத்திற்கு வெளியே மூன்று வேளை உணவை உண்ண முடியும் என்கிறார்கள்.
பில்டப் ஓவரா இருக்குனு நினைக்கிறீங்களா, அந்த அளவுக்கு அங்க விலை உயர்ந்ததாக இருக்கும். அப்படி என்ன விமான நிலையம் அது அப்படினு யோசிக்கிறீங்களா? துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையம் தான் அது. அங்கு விற்கப்படும் உணவு மற்றும் பிற பானங்களின் அதிக விலை காரணமாக இது ‘உலகின் மிகவும் விலையுயர்ந்த விமான நிலையம்’ என்று பயணிகளால் கூறப்படுகிறது.
இஸ்தான்புல் விமான நிலையத்தின் மிக அடிப்படையான உணவுப் பொருட்களுக்கு கூட அதன் அதிக விலைகள் காரணமாக, இத்தாலிய செய்தித்தாள் கோரியர் டெல்லா செரா, இஸ்தான்புல் விமான நிலையத்தை உலகின் மிகவும் விலையுயர்ந்த விமான நிலையம் என்று அழைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,20,000 பேர் இங்கு வருகை தருகிறார்கள். குறிப்பாக, உணவு மற்றும் பானத்தைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் விலை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் கருதுகின்றனர். விமான நிலைய உணவு விற்பனை நிலையங்களில் ஒரு பீருக்கு £15 (சுமார் ரூ. 1,698) மற்றும் ஒரு வாழைப்பழத்திற்கு கிட்டத்தட்ட £5 (தோராயமாக ரூ. 565) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இத்தாலிய செய்தி நிறுவனமான எல்’எகனாமியாவின் எழுத்தாளர் லியோனார்டோ பெர்பெரி இஸ்தான்புல்லில் உள்ள விமான நிலையத்தில் தனது அனுபவத்தைப் பற்றி பேசினார். இத்தாலியின் பிரபல லாசக்னா 90 கிராம் £21 (ரூ. 2,376) விலைக்கு விற்கப்படுவதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக கூறினார். “பார்ப்பதற்கு இது துருவிய சீஸ் மற்றும் ஒரு போலி-துளசி இலை போன்ற தோற்றமுடைய ஒரு செங்கல் துண்டு போல் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
சுவையான குரோசண்ட்களின் விலை £12.50 (ரூ.1,410) முதல் £15 (ரூ.1,698) வரை இருந்ததாகவும், இத்தாலிய சிக்கன் சாலடுகள் £15 (ரூ.1,698) விலைக்கு விற்கப்படுவதாகவும் லியோனார்டோ கூறியுள்ளார். பீரின் விலையை பொறுத்த வரையில், கிட்டத்தட்ட பயணிகளை மிரட்டி பணம் பறிப்பது போல் இருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர், விமான நிலையத்தில் உள்ள சில துரித உணவு நிறுவனங்களையும் பார்வையிட்டுள்ளார். அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு செய்யப்படும் செலவுகளைக் கண்டும் வியப்படைந்துள்ளார்.
பர்கர் கிங் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற மலிவான துரித உணவு உணவகங்கள் கூட அவற்றின் அடிப்படை கட்டணத்தை விட அதிக தொகையை வசூலித்தன. மெக்டொனால்ட்ஸில் ஒரு பிக் மேக் மற்றும் டபுள் குவாட்டர் பவுண்டரின் விலை முறையே £18.35 (சுமார் ரூ.2,000) மற்றும் £21.65 (தோராயமாக ரூ.2,450) ஆக இருந்தது. அதே நேரத்தில், போப்யேஸில் நான்கு வறுத்த சிக்கன் விங்ஸ், பிரஞ்சு ஃப்ரைஸ் மற்றும் ஒரு கோகோ கோலா £15 (ரூ.1,698) ஆக இருந்துள்ளது.
அவரது பதிவைப் பார்த்த பிறகு, சமூக ஊடக பயனர்களில் சிலர் கருத்துப் பிரிவில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். பயனர்களில் ஒருவர், “எனக்குத் தெரியும், ஆனால் மற்ற விமான நிலையங்களைப் போல, அவர்களால் சரியான விலைகளை நிர்ணயிக்க முடியாதா?” என்று தெரிவித்தார்.
மற்றொருவர், “மக்கள் பணம் செலுத்துவார்கள் என்பதால் தான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். என் சகோதரி சமீபத்தில் டப்ளினில் இருந்தார். அங்கு 2 பெரிய மேக் உணவுகள் சுமார் 40 யூரோக்கள் என்று கூறினார். நான் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்தேன். லாகார்டியா மற்றும் ஆர்லாண்டோ எம்சிஓ போன்ற விமான நிலையங்களில் மிகவும் நியாயமான விலைகளில் உணவுகள் விற்பனை செய்கின்றன. அயர்லாந்தின் டப்ளின் ஒரு மோசடி, ஆனால் இஸ்தான்புல்லை விட மோசமாக இல்லை.” என்றும் அவர் கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 28, 2025 4:22 PM IST

