Last Updated:
2023-ல் ஆஸ்திரேலியாவின் சிறந்த 100 தொழில்முனைவோர்களில் 14-வது இடத்தைப் பிடித்த காஷ்மீரை சேர்ந்த நபர்.. யார் இவர் தெரியுமா?
தனது சமூகத்தில் உள்ள மற்றவர்களைப் போல் அரசாங்க வேலைகளைத் தேடாமல், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் பெரிய கனவுகளைக் காணத் துணிந்தான். அவன் மனதில் வித்தியாசமான பாதை இருந்தது. உறுதியுடனும் தைரியத்துடனும் போராடி, தனது சொந்த வெற்றிக் கதையை உருவாக்கி, சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவராக இன்று உருவெடுத்துள்ளான்.
காஷ்மீரில் பிறந்து ஆஸ்திரேலியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக மாறிய அவரது பயணம் எளிதானது அல்ல; ஆனால் இவரது கதை பல இளைஞர்களுக்கு நிச்சயம் ஊக்கமளிக்க கூடியதாக இருக்கும். நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த மணிந்தர்ஜித் மன்னு காலாவின் தந்தை வங்கி ஊழியர் ஆவார். தாயார் ஆசிரியர். சிறு வயதிலிருந்தே, மணிந்தர்ஜித் காலா மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதல் கொண்டிருந்தார். தன்னைச் சுற்றியுள்ள பிரச்சனைகளைக் கவனித்து, அதற்கான தீர்வுகளை தேட தொடங்கினார்.
பாரமுல்லாவில் உள்ள செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயின்றார் மணிந்தர்ஜித். அங்கு இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்தவுடன் பாரம்பரிய வேலையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, புதுமைகளை உருவாக்கி புதிதாக ஏதாவது ஒன்றைக் கொண்டுவருவதில் அவர் உறுதியாக இருந்தார்.
மணிந்தர்ஜித் ஆஸ்திரேலியாவில் இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றபோது, சந்தையில் நிலவும் இடைவெளிகள் மற்றும் பூர்த்தி செய்யப்படாத தேவைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தினார். இது அவரை வணிக முன்னோடியாக மாறுவதற்கான பாதையில் வழிநடத்தியது. அவரது தொழில்முனைவோர் பயணம் 2011-ல் டைனமிக் பேத்தாலஜி மற்றும் 201-ல் மெட்லாப் பேத்தாலஜி ஆகிய நிறுவனங்களுடன் தொடங்கியது. இவை இரண்டும் ஆஸ்திரேலியாவின் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவை.
இந்த நிறுவன முயற்சிகள் அவருக்கு வணிக மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் விதிமுறைகள் குறித்த மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. எதற்கும் சோர்ந்து போகாமல் போராடும் குணத்திற்கு தன்னுடைய காஷ்மீர் பின்னனியே காரணம் எனக் கூறும் மணிந்தர்ஜித், போட்டி நிறைந்த ஆஸ்திரேலிய வணிக நிலப்பரப்பில் வெற்றிபெற இது தனக்கு உதவியதாக நம்புகிறார்.
கோவிட் 19 தொற்றுநோய் காலத்தில், அதாவது 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக எழுந்துள்ள சுகாதாரப் பாதுகாப்பு சவால்களை நிவர்த்தி செய்ய கோவாக்ஸ் ஆஸ்திரேலியா நிறுவனத்துடன் இணைந்து KnG குழுமத்தை நிறுவினார் மணிந்தர்ஜித் காலா. இந்த நிறுவனம் பல துறைகளை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாக உருவெடுத்தது. இவரது புதுமையான தீர்வுகள் பலரது அங்கீகாரத்தைப் பெற்றன. இதனையடுத்து 2023-ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சிறந்த 100 தொழில்முனைவோர்களில் 14-வது இடத்தைப் பிடித்தார் மணிந்தர்ஜித்.
வெற்றியின் உச்சத்தில் இருக்கும் மணிந்தர்ஜித், தனது சொந்த ஊரான காஷ்மீரில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் பகுதியில் மகத்தான ஆற்றலைக் கண்டுள்ள அவர், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் நிலையான சுற்றுலாவில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய விரும்புகிறார். தனது சர்வதேச அனுபவம் மூலம் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் உலகளாவிய வலைப்பின்னல்களையும் கொண்டு வந்து காஷ்மீரின் இயற்கை வளங்களையும் திறமையான இளைஞர்களையும் பயன்படுத்திக் கொள்ளும் என்று அவர் நம்புகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 28, 2025 1:33 PM IST

