Last Updated:
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி காஷ்மீரின் பிரபல சுற்றுலாதலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குதிரை ஓட்டி உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவிவருகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்ற ஆணை, சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தான் மக்கள் இந்தியா வர தடை, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைப்பு, சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு என பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதேபோல் பாகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தை தூண்டுவது, எல்லை தாண்டிய படுகொலைகள், சர்வதேச சட்டங்களை மீறுவது மற்றும் காஷ்மீர் குறித்த ஐநா தீர்மானங்களை பின்பற்றாதது ஆகியவற்றை நிறுத்தும் வரை, சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் இடைநிறுத்தம் செய்ய பாகிஸ்தான் உரிமை கொண்டுள்ளது என அறிவித்து சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இப்படி இரு நாடுகளும் ராஜதந்திர ரீதியில் பல நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அவ்வப்போது இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே சிறுசிறு துப்பாக்கி சண்டைகள் நடந்துவருகிறது.
அந்த வகையில், 27-28ஆம் தேதி இரவு காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு பகுதியில் உள்ள குப்வாரா மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்கள் அருகே பாகிஸ்தான் ராணுவம் முதலில் சிறிய ரக துப்பாக்கிகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.
Jammu and Kashmir
April 28, 2025 1:21 PM IST


