Last Updated:
ஐபிஎல் போட்டியில் ஆரஞ்சு தொப்பியை 3 மணிநேரத்தில் கைப்பற்றினார் விராட் கோலி.
ஐபிஎல்லில் நேற்று நடந்த போட்டியில் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், டெல்லி அணியை பெங்களூரு அணி பதம் பார்த்த நிலையில், ஆரஞ்சு தொப்பி 3 மணிநேரத்தில் விராட் கோலியின் வசம் வந்தது. டெல்லியில் நேற்றிரவு நடந்த 46 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்தில் விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. 4 ஆவது விக்கெட்டிற்கு கை கோர்த்த விராட் கோலி – குருணல் பாண்ட்யா அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஆட்டம் நடைபெற்ற இடம், விராட் கோலி பிறந்து வளர்ந்த இடம் என்பதால், களச்சூழலை சரியாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குருணல் பாண்ட்யா மற்றும் விராட் கோலியின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இதனிடையே, அதிக ரன் குவிப்பிற்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத் வீரர் சாய் சுதர்சனிடம் இருந்து மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் வாங்கினார். நேற்று நடந்த பகல் போட்டியில் லக்னோ அணியுடன் மும்பை அணி பலப்பரிட்சையில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் எடுத்ததால், சாய் சுதர்சனிடமிருந்த ஆரஞ்சு தொப்பியை சூர்யகுமார் யாதவ் பெற்றார்.
ஆனால் நேற்று இரவே விராட் கோலி அரைசதம் விளாசியதால், இந்த தொடரின் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்திற்கு வந்தார். இதனால், சூர்யகுமார் யாதவிடமிருந்த ஆரஞ்சு தொப்பியை 3 மணிநேரத்தில் தன்வயப்படுத்தினார் விராட் கோலி.
விராட் கோலி இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 10 ஆட்டங்களில் 6 அரை சதம் உட்பட 443 ரன்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
April 28, 2025 11:27 AM IST


