Last Updated:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தயார். சிந்து நதிநீர் பங்கீட்டை நிறுத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். சிந்து நதிநீரை வழங்குவது பாகிஸ்தானின் நலனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஷெபாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அனந்த்நாக் பகுதியை சேர்ந்த ஆதில் தோகர் என்பவரும், திரால் பகுதியை சேரந்த ஆசிஃப் ஷேக் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருவரில், ஆதில் தோகர் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் -இ- தொய்பா அமைப்பில் ஆயுதப்பயிற்சி பெற்றவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், திரால் மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளை அட்டாரி-வாகா எல்லை வழியாக அனுப்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகத்தன்மையான விசாரணைக்கு தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், சிந்து நதி நீர் பங்கீட்டை நிறுத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் எச்சரித்துள்ளார். சிந்து நதிநீரை வழங்குவது பாகிஸ்தானின் நலனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷெபாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கும், டி.ஆர்.எஃப் அமைப்பிற்கும் தொடர்பு இல்லை என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. காஷ்மீர் பற்றாளர்கள் மீது அவதாறு பரப்பை திட்டமிட்ட நாடகம் நடத்தப்படுவதாக டி.ஆர்.எஃப். குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களில், தங்களின் சமூகவலைதளக் கணக்கில் ஊடுருவி தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல என்றும் டி.ஆர்.எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
April 26, 2025 7:28 PM IST
பஹல்காம் தாக்குதல் : நடுநிலையான விசாரணைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்


