“மீண்டும் மீண்டுமா?’ என்பதுப்போல தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே மோதல் தலைதூக்கி உள்ளது.
சமீபத்தில், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில் நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்கா முன்வைத்த இரண்டு முக்கிய அம்சங்கள்…
1. கிரிமியாவை ரஷ்யப் பகுதியாக உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும்.
2. உக்ரைனை நேட்டோ படையில் சேர்த்துகொள்ள முடியாது.
இந்த இரண்டையும் ஏற்றுகொள்ள உக்ரைன் தயாராக இல்லை. காரணம், இது இரண்டுமே ரஷ்யாவிற்கு சாதகமானவை.

கிரிமியா குறித்து அமெரிக்கா சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெலன்ஸ்கி, “இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இது நமது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவது ஆகும். இது நமது பிரதேசம். உக்ரைன் மக்களின் பிரதேசம்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப், “கிரிமியா பல ஆண்டுகளுக்கு முன்பே உக்ரைன் கைவிட்டு சென்றுவிட்டது. அது பற்றி விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.
அமைதி பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் தருவாயில் ஜெலன்ஸ்கி அதை கெடுத்துவிட்டார் என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

