தீவிர தேடுதல் நடவடிக்கை
இந்த நிலையில், பயங்கரவாதிகள் ஜம்முவின் கிஷ்த்வாரில் எல்லை கடந்து, கோகர்நாக் வழியாக பைசாரனுக்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
தாக்குதலுக்குப் பிறகு பெஹல்காமில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுற்றுலாப் பகுதிகளின் தெருக்கள் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பல அமைப்புகள் பந்த் அழைப்பு விடுத்துள்ளன.
சொந்த ஊர்களுக்கு திரும்பும் சுற்றுலாப் பயணிகள்
இந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களையும் தவிர்த்து சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான தில்லியைச் சேர்ந்த சமீர் பரத்வாஜ், “நாங்கள் கடந்த மூன்று நாள்களாக காஷ்மீரில் இருந்து வருகிறோம். பெஹல்காமில் உள்ள இடங்களைப் பார்வையிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அங்கு நிலைமை சரியில்லாததால், நாங்கள் தில்லிக்குச் செல்கிறோம். இங்கு நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. பெஹல்காமில் முதல் முறையாக இதுபோன்ற கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது,” என்று கூறினார்.

