Last Updated:
Pope Francis | போப் ஆண்டவரின் இறப்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து இந்தியாவில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார். நேற்று (ஏப்.21) காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் போப் பிரான்சிஸ் மறைந்தார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக போப் பிரான்சிஸ் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில் மறைந்திருக்கிறார். போப் பிரான்சிஸ், ரோம் நேரப்படி காலை 7:35 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இறப்புக்கு காரணம் நிமோனியா காய்ச்சல் அல்ல, மூளையின் திசுக்களில் ஏற்பட்ட ரத்தக் கசிவே என்று வாடிகன் உறுதிப்படுத்தி உள்ளது. போப் ஆண்டவர் இறந்த பின் அவரது உடல் வெள்ளை நிற துணியில் வைக்கப்பட்டு அவருக்கான தனிப்பட்ட தேவாலயமான “ரெடெம்ப்டோரிஸ்” தேவாலயத்தில் வைக்கப்படும். வழக்கமாக போப் ஆண்டவரின் உடல் சைப்பரஸ், ஈயம் மற்றும் கருவாலி மரத்தால் செய்யப்பட்ட சவப் பெட்டிகளில் வைத்து அடக்கம் செய்யப்படும் நிலையில், தன்னை ஈயத்தால் ஆன சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்தால் போதும் என போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
Also Read: ஆடம்பரத்தை விரும்பாத போப் பிரான்சிஸ்.. எளிய வாழ்க்கை டு கத்தோலிக்க திருத்தந்தை வரை!
மேலும் உயிரிழந்த போப் ஆண்டவரின் சடலம் வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் அடக்கம் செய்யப்படும் நிலையில், அதை விரும்பாத பிரான்சிஸ், தனது உடலை ரோமில் உள்ள “சான்டா மரியா மேகியார்” பசிலிக்காவில் அடக்கம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். 17ஆம் நூற்றாண்டுக்கு பின் வாடிகனுக்கு வெளியே போப் ஆண்டவர் ஒருவர் அடக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.
முன்னதாக, போப் ஆண்டவரின் இறப்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து இந்தியாவில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விரைவில் புதிய போப் ஆண்டவருக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசியா மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 9 பேர் இதில் முன்னணியில் உள்ளனர்.
April 22, 2025 7:10 AM IST
Pope Francis | 17ம் நூற்றாண்டுக்கு பின்.. மறைந்த போப் பிரான்சிஸ்-ன் விருப்பங்கள்.. இந்தியாவில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு!


