கர்நாடக மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ஓம்பிரகாஷ். 2017-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். அவர் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி பல்லவி. இரு தளங்களை கொண்ட வீட்டில், தரை தளத்தில் ஓம்பிரகாஷ் தனது மனைவியுடன் வசித்து வந்தார். முதல் மற்றும் 2-வது மாடியில் மகன் வசித்து வருகிறார். ஓம்பிரகாசுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மதியம் ஓம்பிரகாஷ், பல்லவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பல்லவி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவர் ஓம்பிரகாசை கண்மூடித்தனமாக குத்தி இருக்கிறார். இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அதன்பிறகு தனது கணவரை கொலை செய்து விட்டதாக கூறி, போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு பல்லவி தெரிவித்து இருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் விரைந்து சென்ற நிலையில், பல்லவி வீட்டுக்கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு இருந்துள்ளார்.
நீண்ட நேரத்திற்கு பின்னர் அவர் கதவை திறக்க, போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஓம்பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.அலோக் மோகன் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். முதற்கட்டமாக நடந்த விசாரணையில் ஓம்பிரகாசை, அவரது மனைவி பல்லவியே கத்தியால் குத்திக் கொன்றது உறுதி செய்யப்பட்டதால், அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை அங்கிருந்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் டிஜிபிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து ஏராளமான தகவல்களும் வெளிவந்துள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குடும்பத்தினர் உள்ள, ‘வாட்ஸ்அப்’ குரூப்பில், பல்லவி ஒரு தகவல் பகிர்ந்து இருக்கிறார். அதில், ‘ஓம்பிரகாஷ் வீட்டில் துப்பாக்கியுடன் சுற்றுகிறார். எந்த நேரத்திலும் என்னை கொல்ல வாய்ப்பு உள்ளது’ என்று பதிவிட்டு இருந்தார். ஓம்பிரகாசுக்கும், பல்லவிக்கும் இடையில் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட பகுதியில் ஓம்பிரகாஷ் வேலை செய்த போது, தண்டேலியில் வாங்கிய நிலத்தை தனது தங்கைகள் பெயரில் பதிவு செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பல்லவி அடிக்கடி ஓம்பிரகாஷுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நேற்று மாலையும் இருவருக்கும் இடையில் சண்டை நடந்து உள்ளது. உச்சக்கட்ட கோபத்தில் இருந்த பல்லவி, கத்தியால் ஓம்பிரகாஷ் உடலில் 10க்கும் மேற்பட்ட முறை, சரமாரியாக குத்தி கொன்று இருப்பது தெரியவந்துள்ளது.
ஓம்பிரகாசை கொன்ற பின், ஓய்வு பெற்ற இன்னொரு ஐ.பி.எஸ் அதிகாரி மனைவிக்கு, பல்லவி வீடியோ காலில் பேசியதாகவும், ‘அந்த அரக்கனை கொன்றுவிட்டேன்’ என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஓம்பிரகாஷ் கொலைக்கு சொத்து பிரச்னை மட்டும் தான் காரணமா, வேறு எதுவும் பிரச்னையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
April 21, 2025 2:30 PM IST
“அரக்கனை கொன்று விட்டேன்” – கத்தியுடன் வீடியோ காலில் வந்த மனைவி.. முன்னாள் டிஜிபி கொலையில் பகீர்!

