Last Updated:
ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவுக்குச் சொந்தமான 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள் எஞ்சியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற பல லட்சம் நவீன ஆயுதங்களை பயங்கரவாத குழுக்களுக்கு தலிபான் அமைப்பு விற்றுவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்தபோது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்த அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பியபோது, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களை அங்கேயே விட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எம்4 மற்றும் எம்16 ரக துப்பாக்கிகளும் அடங்கும்.
இந்த ஆயுதங்களை தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் மற்றும் ஏமனின் அன்சாருல்லா இயக்கம் ஆகியவை கள்ளச் சந்தையில் வாங்குவதாக ஏற்கெனவே ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் குழு கூட்டத்தில், அமெரிக்க ராணுவ உபகரணங்கள் மற்றும் பாதி ஆயுதங்கள் காணாமல் போய்விட்டதாக தலிபான் அரசும் ஒப்புக்கொண்டது.
ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவுக்குச் சொந்தமான 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள் எஞ்சியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இவை அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தற்போது, அமெரிக்காவின் அதிநவீன பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. ஆனால் அவற்றை இயக்க தலிபானிடம் பயிற்சி பெற்ற விமானிகள் இல்லை. இது மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான உயர் வகை பல்நோக்கு சக்கர வாகனங்கள், கண்ணிவெடிகளின் தாக்கத்தைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் ஆகியவையும் உள்ளன.
ஹம்வீஸ் மற்றும் சிறிய ஆயுதங்கள் போன்ற எளிதாக இயக்கக்கூடிய உபகரணங்களை, தலிபான்கள் தற்போது அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில். அமெரிக்காவின் நவீன ஆயுதங்களை பயங்கரவாத குழுக்களுக்கு தலிபான் விற்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆயுதங்களை எதிரி நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத இயக்கங்கள் பயன்படுத்தக் கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.
April 19, 2025 12:28 PM IST


