Last Updated:
சேவாக் மோசமாக விளையாடியதால் பயிற்சியாளர் ஜான் ரைட் அவரை குத்திய சம்பவத்தை கங்குலி நினைவுகூர்ந்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் சரியாக விளையாடவில்லை என்று பயிற்சியாளர் ஒருவர் முகத்தில் குத்தியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நினைவுகூர்ந்தார்.
கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி நேட்வெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கங்குலி 2ஆவது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்த முக்கிய நேரத்தில், பவுலரின் தலைக்கு மேல் அடிப்பதாக நினைத்து சேவாக் ஒரு பந்தை விளையாடினார். ஆனால் அந்த பந்தில் சேவாக் மோசமாக தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து வீரர்களின் அறைக்கு வந்த சேவாக் தனது பேட்டிங் பேடை கழற்றினார். இதைப்பார்த்து கோபமடைந்த பயிற்சியாளர் ஜான் ரைட், சேவாகின் காலரை பிடித்து சுவற்றின் மீது தள்ளி அவரை பிடித்துக்கொண்டார். “இப்படி ஒரு மோசமான ஷாட்டை விளையாடிவிட்டு வந்தபிறகு, எப்படி ஒன்றுமே நடக்காததுபோல பேடை கழற்றுகிறாய்?” என கோபத்தில் கத்தி, சேவாக் முகத்தில் குத்தினார்.
சேவாக் மிகவும் கோபக்காரர். ஆனால் ஜான் ரைட் அவர் முகத்தில் குத்தினாலும் அவர் எந்த வித எதிர்வினையும் செய்யவில்லை. இதையடுத்து அறைக்கு வந்த கங்குலியிடம் அனில் கும்ளே நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து அமைதியாக பயிற்சியாளர் ஜான் ரைட்டிடம் சென்ற கங்குலி, “உண்மையில் நீங்கள் சேவாக் முகத்தில் குத்தினீர்களா?” என்று கேட்க அவரும் ஆம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் திருப்பி தாக்கினாரா என கங்குலி கேட்டதற்கு இல்லை என்று ஜான் ரைட் பதிலளித்துள்ளார். மேலும் அந்த பிரச்சனையை அங்கேயே விட்டுவிட்டதாகவும் ஜான் ரைட் தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட கங்குலி, சேவாக்கிடம் சென்று “ஜான் ரைட் உன்னை தாக்கினாரா?” என்று கேட்க, அவரும் ஆம் என பதிலளித்துள்ளார். மேலும் “நான் தவறான ஷாட்டை விளையாடினேன். அவர் குத்தியதால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ‘கவுதம் காம்பீருடன் வாக்குவாதம் நடந்தது’ – சிட்னி டெஸ்டிலிருந்து விலகியது குறித்து முதன்முறையாக ரோஹித் சர்மா பதில்
இதை கேட்ட கங்குலிக்கு உண்மையில் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது. அவர் சச்சின் டெண்டுல்கரிடம் சென்று நடந்தவை தெரியுமா என்று கேட்க, அவர் அறைந்தபோது தான் அந்த இடத்தில் தான் இருந்தேன் என சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார். உடனே கங்குலி, “சச்சின் நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா..? நம்முடைய அணி ஒரு நேர்மறையான திசையில் சென்றுக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் நன்றாக விளையாடவில்லை என அணியின் பயிற்சியாளர் கோபப்படுகிறார். அதை வீரரிடம் வெளிப்படுத்தியும் அவர் அறையை விட்டு வெளியே அந்த பிரச்சனையை எடுத்துச் செல்லவில்லை” என கூறியுள்ளார்.
கங்குலி காலத்தில் தான் இந்திய அணி மிகச்சிறந்த ஓர் அணியாக உருவெடுத்தது என பலர் கூறும் நிலையில் இந்த சம்பவம் எப்படி அதற்கு ஒரு உதாரணமாகவே உள்ளது.
April 18, 2025 2:38 PM IST


