Last Updated:
மகாராஷ்டிராவில் 2025-26 கல்வியாண்டு முதல் 3வது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 80% ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறை பயிற்சி அளிக்கப்படும்.
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 3வது மொழியாக இந்திப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அம்மாநிலத்தில் உள்ள பள்ளியில் 3 மொழிகளை கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மராத்தி மற்றும் ஆங்கில வழியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரு மொழிகளை மட்டும் கற்பிக்கும் பள்ளிகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மகாராஷ்டிராவில் உள்ள 80% ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறை குறித்தும் டிஜிட்டல் தளங்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளை கற்பது கட்டாயமாக உள்ள நிலையில், மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை வரும் 2025 – 26 கல்வியாண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், 2028 – 29ஆம் கல்வியாண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “வக்ஃப் சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” – உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
புதிய கல்விக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாகவும், அது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் எனவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் புதிய கல்விக் கொள்கையில் இந்தி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை கவனிக்கத்தக்க வகையில் பார்க்கப்படுகிறது.
April 18, 2025 9:02 AM IST


