வாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட சீன பெண், இந்த ஆண்டின் தொடக்கத்தில் குவாங்டாங் மாகாணத்தின் குவாங்சோவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். “நல்ல செயல்திறன் கொண்ட ஊழியர்” என்று அந்த நிறுவனத்தில் நன்மதிப்பு கொண்ட அவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்ததையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த நிறுவனம் வாங்கை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாகவும், அவருக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வாங் தனது பணி நேரத்தில் இருந்து ஒரு நிமிடம் முன்னதாக சென்றது “அவர் சீக்கிரமாக வெளியேறியதற்கு” சமமாகாது என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து நிறுவனம் அவருக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும், அவரது நடத்தையை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. இதனால் வாங்கை பணிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்றும், அவரை நீக்கியதற்கான தகுந்த ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை என்றும், இது நியாயமானதல்ல என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
திருமதி வாங்கின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு இறுதியில் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தன்னை அழைத்து, அலுவலக கண்காணிப்பு பதிவுகளின் படி, வருடத்தின் ஒரு மாதத்தில் ஆறு நாட்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட அலுவலக நேரத்தை விட ஒரு நிமிடம் முன்னதாகவே வீட்டிற்கு கிளம்பிச் சென்றதாக என்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
முந்தைய நிகழ்வுகள்
கடந்த ஆண்டு நவம்பரில், இதே சீனாவில், ஏற்கனவே கூடுதல் நேரம் வேலை செய்துவிட்டு, சிறிது நேரம் தூங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு, 350,000 யுவான் (ரூ.41.6 லட்சம்) இழப்பீடு வழங்கப்பட்டது. ஜியாங்சு மாகாணத்தின் டைக்சிங்கில் உள்ள ஒரு ரசாயன நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக துறை மேலாளராகப் பணியாற்றிய ஜாங், தனது பதவியில் இருந்து சம்பிரதாயமற்ற முறையில் நீக்கப்பட்டார்.
இதையும் படிக்க: வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக்கொண்ட 12 வயது சிறுமி..! போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ஒழுங்குமுறை மீறல்களுக்காக பணியாளர்களின் ஒப்பந்தங்களை நிறுத்த முதலாளிகளுக்கு உரிமை இருந்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்துவது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
அதேபோல், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பெய்ஜிங் சட்ட நிறுவனம் ஒன்று ஊழியர்களின் வேலை நேரத்தை சட்டவிரோதமாக நீட்டித்ததையடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. இப்படியான செயல்பாடுகளுக்கு மிகவும் அரிதாக அதிகாரிகள் அபராதம் விதித்ததால் சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டைப் பெற்றது.
April 17, 2025 5:16 PM IST
வேலை நேரம் முடிவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சீனப்பெண் – சட்டப் போராட்டத்தில் வெற்றி!

