Last Updated:
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பு விஜய்க்கு கண்டனம் தெரிவித்து ஃபத்வா வெளியிட்டுள்ளது.
ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்க்கு கண்டனம் தெரிவித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இஸ்லாமிய அமைப்பு ஃபத்வா வெளியிட்டுள்ளது.
ரமலான் நோன்பையொட்டி நடிகர் விஜய் கடந்த மார்ச் 7 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் அதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழுகையிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து விஜய்யை ஆதரித்தும் விமர்சித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பு விஜய்க்கு கண்டனம் தெரிவித்து ஃபத்வா வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
குடிகாரர்கள், சூதாட்டக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளை இப்தார் விருந்துக்கு அழைப்பது சட்டவிரோதமானது மற்றும் பாவமானது. அத்தகைய நபரை நம்ப வேண்டாம். அவரைத் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். அவரிடமிருந்து தமிழக முஸ்லிம்கள் விலகியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இப்தாவின் தலைவருமான முப்தி மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, இந்த ஃபத்வாவை (மார்க்க தீர்ப்பை) வழங்கியுள்ளார்.
மேலும் இந்த ஃபத்வாவில், விஜய் தளபதி திரைப்பட உலகில் இருந்து அரசியலில் நுழைய முஸ்லிம் உணர்வுகளைப் பயன்படுத்துகிறார். “பீஸ்ட்” படத்தில், முஸ்லிம்களையும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் இணைத்துள்ளார்.
இப்போது அரசியலில் நுழைந்துள்ள விஜய் தனக்கு வாக்குகள் தேவை என்பதற்காக முஸ்லிம்களை திருப்திப்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டு முஸ்லிம்கள் விஜய்யை தூரத்தில் வைத்திருக்க வேண்டும், அவரது நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடாது. அவரை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
April 16, 2025 7:53 PM IST


