சர்ச்சைகள்
அதன்பிறகு, 2024 ஆம் ஆண்டில் டோலோ 650 மாத்திரையால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் கல்லீரல் பிரச்னைகள் ஏற்படும் என்றும் தகவல்கள் பரவின.
ஆனால், டோலோ 650 மாத்திரை உலகளவில் காய்ச்சல் மற்றும் வலிக்கு பரவலாக பயன்படுத்தப்படும் மருந்து என்றும் சர்வதேச அளவில் ஆய்வுகளுக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டவை என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
மருத்துவரின் அறிவுரையின்றி அளவுக்கு மீறி எந்த மாத்திரையை உட்கொண்டாலும் ஆபத்துதான் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கரோனா காலத்தில் டோலோ 650 மாத்திரைகளை பிரபலப்படுத்த மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான மாத்திரைகளை இலவசமாக மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் இருப்பது ஒருபுறம்.
விளைவுகள்
காய்ச்சல் என்றால் முதல்கட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டிய பாராசிட்டமால் 500 மில்லிகிராம் மாத்திரையை தவிர்த்துவிட்டு, அனைவரும் 650 மில்லிகிராம் டோலோவை எடுத்துக்கொண்டதன் விளைவு தற்போது பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது.
இதனால்தான், பாராசிட்டமல் 500 மில்லிகிராம் மாத்திரைகள் போட்டால் காய்ச்சல் போன்றவை சரியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது அதிகப்படியான மருந்தை அதிகமுறை எடுத்துக்கொண்டு, அதற்கு உடல் பழகிவிட்டதால், அதைவிடக் குறைவான மருந்தைக் கொடுக்கும்போது, அதனை உடல் அலட்சியம் செய்துவிடுகிறது.
அதுமட்டுமல்ல, லேசான காய்ச்சல் அறிகுறி, உடல் வலி ஏற்பட்டாலே டோலோ மாத்திரையை உட்கொள்வதால் உண்மையான உடல்நலப் பிரச்னை என்னவென்பது தெரியாமலேயே, நோய் பெரிதானப் பிறகுதான் மருத்துவமனைக்கு வரும் நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என்பதுபோல, இனி டோலோ 650யை இரண்டு மாத்திரைகள் போட்டால்தான் லேசான காய்ச்சல் குணமாகலாம் என்ற நிலைகூட ஏற்படலாம். எனவே, மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை இன்றி தனக்குத் தானே எடுத்துக்கொள்ளும் முறையை கைவிடுவது ஒன்றே சாலச்சிறந்தது என்பது தெளிவாகிறது.
(மருத்துவர்களின் ஆலோசனை இன்றி டோலோ மட்டுமின்றி எந்த மாத்திரையையும் உட்கொள்ள வேண்டாம்)

