லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்டநாயகனாக ஜொலித்த கேப்டன் தோனி, புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
லக்னெளவை ஏமாற்றிய பேட்டர்கள்
லக்னெள அணிக்கு நேற்று பேட்டர்கள் எதிர்பார்த்த பங்களிப்பை செய்யவில்லை. மார்க்ரம்(6), நிகோலஸ் பூரன்(8) இருவரும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியுடன் முன்னணியில் இருக்கும் பூரன் விரைவாக விக்கெட்டை இழந்தது சிஎஸ்கேவின் நல்லநேரம்.
அதேபோல மார்ஷ் 30 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததும், லக்னெளவுக்கு பெரிய ஸ்கோரை வழங்க முடியவில்லை. பூரன், மார்ஷ் இருவரும் களத்தில் நின்றிருந்தால், சிஎஸ்கேவுக்கு 6வது தோல்வி கிடைத்திருப்பது உறுதியாகியிருக்கும்.
கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் லக்னெள அணிக்காக முதல் அரைசதத்தை அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரிஷப்பந்த் பேட்டிலிருந்து பெரிதாக ரன்கள் வரவில்லை. அதன்பின் ரிஷப் பந்த் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி லக்னெள ஸ்கோரை உயர்த்தினார். பதிரானா, கலீல் அகமது ஓவர்களை குறிவைத்த ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி லக்னெள அணியை 150 ரன்கள் கடக்க உதவினார்.
மில்லர் ஏன் விரைவாக வரவில்லை?
அதேபோல நெருக்கடியான நேரத்தில் அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரை களமிறக்காமல், அப்துல் சமதையும், ஷர்துல் தாக்கூரையும் களமிறக்கி லக்னெள அணி தவறு செய்துவிட்டது. அப்துல் சமது களமிறங்க வேண்டிய இடத்தில் மில்லர் களமிறங்கி இருந்தால், லக்னெள ஸ்கோர் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருக்கும். அப்துல் சமது 20 ரன்கள் சேர்த்தும் அதில் 2 சிக்ஸர்கள் மட்டுமே சிரமப்பட்டு அடித்தார், ‘ஷாட்’ ஏதும் சிக்கவில்லை.
ஆனால், மில்லரை அணியில் வைத்திருந்தும் அவரை நடுவரிசையில் களமிறக்காமல் கடைசிவரிசையில் களமிறக்கி லக்னெள அணி அவரை வீணாக்கியது.
சிறப்பான அறிமுகம்
சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோர் அணியின் துணைக் கேப்டன் ஷேக் ரஷீத் நேற்று அறிமுகமாகினார். 2023ம் ஆண்டு சீசனில் இருந்து இவரை சிஎஸ்கே பாதுகாத்தாலும், விளையாட வாய்ப்பு வழங்கவில்லை.
ஆனால், ரஷீத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நேற்று பயன்படுத்தினார். ஆகாஷ் தீப் பந்துவீச்சில் 3 பவுண்டரிகள், விராட் கோலி ஸ்டைலில் பிளிக் ஷாட்டில் சூப்பர் பவுண்டரி என 6 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த பதற்றமும், அச்சமும் இல்லாமல் மிகவும் கூலாக ரஷித் பேட் செய்தார். கெய்க்வாட் பேட்டிங் ஸ்டைலில் ரஷீத் பேட் செய்ததாக வர்ணனையாளர்கள் தெரிவித்தாலும், ரஷீத்தின் ஆட்டம் நேற்று சிஎஸ்கே அணிக்கு பவர்ப்ளேயில் நல்ல தொடக்கத்தை அளிக்க உதவியது.
சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் என நல்ல தொடக்கத்தை அளித்தாலும் நடுப்பகுதியில் விக்கெட்டுகளையும் இழந்து, ரன் சேர்க்கும் வேகத்தையும் குறைத்தது.
ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் மார்க்ரம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதிக்கு கிடைத்த 5வது வாய்ப்பையும் வீணடித்து 9 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு சுமையாக மாறிவருகிறார். ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்களில் தவறான ஷாட்களால் ஆட்டமிழந்தனர். 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்று சிஎஸ்கே தடுமாறியது. கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டதால், சிஎஸ்கே வெற்றி மதில்மேல் பூனையாக மாறியது.
தோனி, துபே சிரமப்படவில்லை
ஷிவம் துபே களத்தில் இருந்தபோது, அவருக்கு லக்னெள சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரன் சேர்க்கக் கடும் சிரமப்பட்டு, 20 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்திருந்தார். விஜய் சங்கர், ஜடேஜா ஆட்டமிழந்தபின் துபேயின் ரன்சேர்ப்பில் தொய்வு ஏற்பட்டது. தோனி களமிறங்கியபின், லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் ஏன் வேகப்பந்துவீச்சுக்கு வாய்ப்புக் கொடுத்தார் எனப் புரியவில்லை.
2024 ஐபிஎல் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமாக ஆடியுள்ளார். ஆனால் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்காமல் தாக்குர், ஆவேஷ்கானை வைத்து வைடு யார்கர், ஃபுல்டாஸ், ஷார்ட் பிட்ச்சில் பந்துவீச வைத்து தோனி, துபே ரன் சேர்ப்பை லக்னெள எளிதாக்கியது.
ஷர்துல் வீசிய 19-வது ஓவரில் துபே 2 பவுண்டரி, நோபாலில் சிக்ஸர் என 19 ரன்கள் சேர்த்தபோது வெற்றி லக்னெளவின் கைகளைவிட்டு சென்றுவிட்டது. 6-வது விக்கெட்டுக்கு தோனி, துபே கூட்டணி 28 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தனர். துபே 43, தோனி 26 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிஎஸ்கே வெற்றிக்கான காரணம்
சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, நூர் முகமது இருவரும்தான். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நடுப்பகுதியில் லக்னெள ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். நூர் முகமது விக்கெட்டுகள் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஜடேஜா 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் பதிராணா, கலீல் அகமது, ஓவர்டன் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு கட்டுக்கோப்புடன் வீசவில்லை, கம்போஜ் 3 ஓவர்கள் வீசி 20 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது, நூர் முகமது, ஜடேஜாவின் பந்துவீச்சுதான்.
சிஎஸ்கே தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியது எப்படி?
வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், “வெற்றி பெற்றது மகிழ்ச்சி. கடந்த போட்டிகள் துரதிர்ஷ்டமாக நாங்கள் எதிர்பார்த்தவாறு செல்லவில்லை. இந்த வெற்றி அணிக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த ஆட்டம் கடினமாக இருந்தது, எங்கள் தருணத்தை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம். கடந்த போட்டிகளில் தொடக்க ஓவர்களில் சிறிது சிரமப்பட்டுள்ளோம் ஆனால் நடுப்பகுதியில் மீண்டு வந்துள்ளோம் சென்னை ஆடுகளமாக இருந்ததால் அவ்வாறு நடந்திருக்கலாம். சிறந்த ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதல் 6 ஓவர்களில் அதிக பந்துவீச்சாளர்கள் தேவை, அஸ்வினை பவர்ப்ளேயில் பந்துவீச வைத்து அதிக அழுத்தம் கொடுப்போம், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த பந்துவீச்சாளர்களை மாற்றுவோம். அந்த வகையில் பந்துவீச்சு என்பது இன்று பேட்டிங்கைவிட சிறப்பாக இருந்தது.
ரஷித் உண்மையாகவே நன்றாக பேட் செய்தார், கடந்த சில ஆண்டுகளாகவே எங்களுடன் பயணிக்கிறார். வலைப்பயிற்சியில் ரஷீத் பேட்டிங் சிறப்பாக இருந்தது, முன்னேற்றம் காணப்பட்டது. பேட்டிங் வரிசையிலும் எங்களுக்கு மாற்றம் தேவைப்பட்டதால் ரஷீத்தை கொண்டுவந்தோம்” எனத் தெரிவித்தார்.
The post சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த ‘ஆட்டநாயகன்’ appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

