கடந்த 1963-ம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். சுமார் 63 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இந்தக் குழுவில், பாப் பாடகியான கேட்டி பெர்ரி, பத்திரிகையாளர் கேல் கிங், வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்படத் தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் இக்குழுவை வழிநடத்தப் போகிறவர், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸ். விண்வெளி பயணம் என்றதும், சுனிதா வில்லியம்ஸின் ஆய்வுப்பயணம் அளவிற்கு இதை கருத தேவையில்லை. இது விண்வெளி சுற்றுலா என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சியாகும். விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதும், பெண்கள் முன்னேற்றமும் இதன் பிரதான நோக்கமாகும்.
இதையும் படிங்க: வங்கதேசத்திற்கான டிரான்ஸ்-ஷிப்மென்ட் வசதியை ரத்து செய்த இந்தியா…! ஏன் தெரியுமா…?
விண்வெளி சுற்றுலாவிற்காக ஜெஃப் பெசோஸ் தொடங்கிய, புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷப்பார்டு (Shepard) ராக்கெட்டில், 6 பெண்களும் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்ல உள்ளனர். அதாவது, பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக் கோடான கார்மன் கோட்டை இவர்கள் கடந்து செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது. பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த கார்மன் கோடு வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த கோடு, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும், சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கோட்டை கடந்தாலே விண்வெளிக்கு சென்றதாக அர்த்தமாகும். இந்த பயணம் சுமார் 11 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். கார்மன் எல்லைக் கோடு பகுதியை இவர்கள் நெருங்கியதும், சில மணிதுளிகள், ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்வார்கள். அப்போது, விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியை கண்டு களிக்க உள்ள இக்குழுவினர், அதன் பிறகு பூமியை நோக்கி திரும்புவார்கள்.
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை, இந்திய நேரப்படி 5.30 மணிக்கு “மகளிர் மட்டும்” குழுவினர் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்ல உள்ளனர். பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் ஒன்றாக மேற்கொள்ளும் இந்த பயணம், விண்வெளி சுற்றுலா என்ற புதிய துறைக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
April 14, 2025 3:48 PM IST
63 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி உட்பட 6 பெண்கள் அடங்கிய குழு இன்று விண்வெளிக்கு பயணம்.. யார், யார் தெரியுமா?

