Last Updated:
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கான்வாய் ஏற்படுத்திய போக்குவரத்து நெரிசலால் JEE தேர்வு எழுத முடியாத மாணவர்களின் புகாரை விசாரிக்க விசாகப்பட்டினம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கான்வாய் ஏற்படுத்திய போக்குவரத்து நெரிசலால் JEE தேர்வு எழுத முடியாமல் போனதாக மாணவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளாக JEE மெயின் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜன சேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கான்வாய் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உரிய நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு செல்ல முடியவில்லை என 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளதாக புகார் எழுந்தது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள பெண்டுர்த்தி பகுதியில் உள்ள தேர்வு மையத்துக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாதது குறித்த மாணவர்களின் புகாரை விசாரிக்க விசாகப்பட்டினம் காவல்துறைக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார். கான்வாயால் எவ்வளவு தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறித்தும் முழுமையான விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பவன் கல்யாண் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “JEE தேர்வுக்காக பெண்டுர்த்தி தேர்வு மையத்துக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என்ற மாணவர்களின் புகாருக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் வகையில் விசாரணை நடத்த துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார்.
கான்வாயால் எத்தனை தூரத்துக்கு போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது? மாணவர்கள் தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டிய நேரத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நிலைமை என்ன? சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதா? இது தொடர்பாக விசாரணை நடத்த விசாகப்பட்டினம் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
April 09, 2025 9:41 AM IST


