மார்ச் 23-ஆம் தேதி சென்னை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, அதன் பின்பு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் என வரிசையாக தோல்வியை கண்ட நிலையில், நேற்று (11.04.2025) நடந்த போட்டியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை சேஸ் செய்தது.
இந்தத் தோல்வியால், மொத்தமாகவே 2 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது இடத்தில் உள்ளது. இதனால், பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான சிஎஸ்கேவின் வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளது. சென்னை அணிக்கு இன்னும் 8 லீக் போட்டிகள் உள்ள நிலையில், அவர்கள் அதிகபட்சம் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசன்களில், 14 புள்ளிகளைப் பெற்ற அணிகள் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே தங்களது மோசமான நெட் ரன் ரேட் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. இந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதமுள்ள 8 போட்டிகளில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற்றால், 16 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், அனைத்து 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கவும் அதிகம் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல்லில் இருந்து விலகிய பின் ரசிகர்களுக்கு ருதுராஜ் மெசேஜ்.. தோனி குறித்து சொன்னது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரவிருக்கும் போட்டிகள்:
ஏப்ரல் 14 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஏகானா மைதானம்
ஏப்ரல் 20 – மும்பை இந்தியன்ஸ் – வான்கடே மைதானம்
ஏப்ரல் 25 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சேப்பாக்கம் மைதானம்
ஏப்ரல் 30 – பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சேப்பாக்கம்
மே 3 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சின்னசாமி மைதானம்
மே 7 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஈடன் கார்டன்ஸ்
மே 12 – ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சேப்பாக்கம்
மே 18 – குஜராத் டைட்டன்ஸ் – நரேந்திர மோடி மைதானம்
April 12, 2025 11:53 AM IST

