Last Updated:
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை 18 நாட்கள் விசாரிக்க என்.ஐ.ஏ.-வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவிடம் 18 நாட்கள் விசாரணை நடத்த என்.ஐ.ஏ.-வுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று, மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பிடிபட்ட அஜ்மல் கசாப் விசாரணைக்குப் பிறகு 2012இல் தூக்கிலிடப்பட்டார்.
பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு குடியேறிய தஹாவூர் ராணாவுக்கு மும்பைத் தாக்குதலில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை நாடு கடத்துமாறு இந்தியா கோரி வந்தது. இதனையடுத்து நாடு கடத்துவதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ராணா தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அதன்படி, அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தது. அப்போது, ராணாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிக்க: முற்றிய வர்த்தகப் போர்.. அமெரிக்கா செல்லும் சீனர்களுக்கு சீன அரசு எச்சரிக்கை
தொடர்ந்து இரவில் டெல்லி பாட்டியாலா ஹவுஸில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் ஜித் சிங் முன்னிலையில், ராணா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, 18 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு ராணா பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
April 11, 2025 6:17 AM IST


